(எம்.மனோசித்ரா)
நாட்டின் மருத்துவ துறைக்கு தேவையான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியுடைய மருந்து தொகையை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரீக் எம்.டீ.அரிஃபுல் ஸ்லாமினால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் மே 31ஆம் திகதி கையளித்தார்.
இவற்றில் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கக் கூடிய சுமார் 75 வகையான மருந்துகள் உள்ளடங்குகின்றன.
இதன்போது கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், 'இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலைமையில் சுகாதாரத் துறைக்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில் ஆரம்ப காலம் முதல் நட்புறவு பேணப்பட்டு வருகிறது. பங்களாதேஷ் மக்களுடன் இலங்கையுடன் நட்புறவினைப் பேணி வருகின்றனர்.' என்று குறிப்பிட்டார்.
மருந்துப் பொருட்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 'இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய உறவுடன் சுகாதாரத் துறையில் உயர்மட்ட உறவுகளும் மிகவும் முக்கியமானது.' எனத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் வைத்தியர்கள் முதல் ஏனைய பணியாளர்களை பரிமாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இத்தகைய பரிமாற்றத் திட்டம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவுகள் மருந்து உற்பத்தி செயல்முறையிலும் இரு நாடுகளின் சுகாதாரத் துறைகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment