(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை உட்பட ஏனைய மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் துரிதகரமான செயற்படுத்த வேண்டும் என மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
பொருளாதார நெருக்கடி மனிதர்களுக்கு மாத்திரமல்ல, விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிருகங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மிருகக்காட்சிசாலை நிர்வாகம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று வனஜீவராசிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, எரிபொருள் தட்டுப்பாட்டினால் தேசிய சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, உணவு மற்றும் ஏனைய மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளினால் விலங்குகளுக்கான உணவு விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வழக்கிலுள்ள யானைகளை பராமரிக்கும் பொறுப்பு மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த யானைகளுக்கான வருடாந்த பராமரிப்பு செலவு 45 மில்லியனாக காணப்படுகிறது. வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட மானியமும் நிறைவு பெற்றுள்ளது.
மிருகக்காட்சிசாலைக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகிக்கும் தரப்பினருக்கு மாத்திரம் 59 மில்லியன் நிலுவை தொகை செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வருடத்தின் இறுதி பகுதிக்கு தேவையான மானியத்துடன் குறைக்கும் பட்சத்தில் தற்போதைய நிலைமைக்கு அமைய 120 மில்லியன் அளவு நிதி அவசியமாகும்.
இக்காரணிகளை கருத்திற் கொண்டு தேவையான மானியத்தை பெற்றுக் கொள்ள திறைசேரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக வனஜூவராசிகள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிறுவன அடிப்படையில் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளும் செயற்திட்டங்களை தயார் செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மனிதர்களுக்கு மாத்திரமல்ல உயிரினங்களுக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருகங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment