(இராஜதுரை ஹஷான்)
உத்தேச அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபினை விரைவாக நிறைவேற்றுமாறு போக்கு வரத்து சங்கத்தின் பிரதிநிதிகள் நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினர்.
விசேடமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஓரிரு வாரங்களுக்குள் திருத்தத்தை நிறைவேற்றுவது அவசியமாகும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கொண்டு வருவதன் அவசியத்தை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினால் நீக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் கணக்காய்வு ஆணைக்குழுவை மீள ஸ்தாபித்தல், ஆணைக்குழுக்களுக்கு சுயாதீன அதிகாரங்களை வழங்கல் 21 ஆவது திருத்தத்தின் பிரதான அம்சங்களாகும்.
21 ஆவது திருத்த வரைபு தொடர்பில் சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்துவது அவசியமானதாகும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்கு வரத்து சேவை சங்கம், அகில இலங்கை முச்சக்கர வண்டி சேவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதன்போது கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment