வினாத்தாள்களுடன் மாணவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை சட்டத்திற்கு முரண் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

வினாத்தாள்களுடன் மாணவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை சட்டத்திற்கு முரண் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். அது மாத்திரமின்றி பரீட்சைகள் சட்டத்தின்படி வினாத்தாள்களை புகைப்படமெடுத்து எந்த வழியிலும் பகிர்வதானது குற்றமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது வினாத்தாள்களுடன் மாணவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை பரீட்சைகள் சட்டத்திற்கு முரணானதாகும்.

இவ்வாறு புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்தமையின் காரணமாக குறித்த மாணவர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை அனைவரும் அறியக்கூடியதாக இருந்தது.

எவ்வாறிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இவ்வாறான நிலைமை தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கோ அல்லது அருகிலுள்ள ஒருங்கிணைப்பு நிலையத்திற்கோ அறிவித்திருக்கலாம். எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்தை அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சை, தற்போது நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை மற்றும் ஒக்டோபரில் இடம்பெறவுள்ள தேசிய பரீட்சைகள் குறித்து வினவிய போது பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன இவ்வாறு பதிலளித்தார்.

'உயர் தரப் பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சைகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது நிறைவடைந்துள்ள சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை நடத்தப்படும் தினம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

ஒக்டோபரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட தினங்களில் நடத்துவதற்கே எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் அது குறித்த இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும்.' என்றார்.

No comments:

Post a Comment