உரிய முறையில் செயற்படாத இலங்கை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபன மென்பொருளுக்கு 64.5 கோடி ரூபா செலவு : மேம்படுத்த 700 கோடி ரூபா அவசியம், உதவுமாறு இளம் தொழில்நுட்ப முயற்சியாளர்களுக்கு CoPE அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

உரிய முறையில் செயற்படாத இலங்கை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபன மென்பொருளுக்கு 64.5 கோடி ரூபா செலவு : மேம்படுத்த 700 கோடி ரூபா அவசியம், உதவுமாறு இளம் தொழில்நுட்ப முயற்சியாளர்களுக்கு CoPE அழைப்பு

இலங்கை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (SPC) மருத்துவ வழங்கல்கள் கையிருப்புகளை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட கணனிக் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 645 மில்லியன் வழங்கப்பட்டுள்ளமையும் அதன் பராமரிப்புக்கு மாதாந்தம் ரூ. 5 மில்லியன் வழங்குகின்றமையும் கோப் குழுவில் தெரிய வந்துள்ளது.

2022ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வரையில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை குறித்தும், அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (31) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே இது தெரிய வந்துள்ளது.

எனினும் அந்தக் கட்டமைப்பு முறையாகச் செயற்படவில்லை என்பதும் புலப்பட்டது. இதனால் குறைந்த செலவில் புதிய கணனிக் கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு தனியார் நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறித்த மென்பொருள் 2008 முதல் உருவாக்கப்பட்டு 7 வருடங்களின் பின்னர் 2015 இலேயே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அதற்கு ரூ. 645 மில்லியன் (ரூ. 64.5 கோடி) வழங்கப்பட்டுள்ளதாக, SPC இன் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

குறித்த மென்பொருளானது, தங்களது தேவைக்கேற்ப உரிய முறையில் பணியாற்றுவதில்லை எனவும், ஒரு சில உள்ளீடுகளை மாத்திரமே அதன் மூலம் மேற்கொள்ள முடியுமென தெரிவித்த அதிகாரிகள், அதற்கு மாதாந்தம் ரூ. 5 மில்லியனை பராமரிப்புத் தொகையாக செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதுள்ள குறித்த கட்டமைப்பை தங்களது தேவைக்கு ஏற்ப மேம்படுத்த, மேலும் ரூ. 7 பில்லியன் (ரூ. 700 கோடி) அவசியமென மதிப்பிடப்பட்டுள்ளதாக, இதன்போது SPC பிரதிநிதிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ வழங்கல்களை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட கணனிக் கட்டமைப்பு உரிய முறையில் இற்றைப்படுத்தாமை மற்றும் பயன்படுத்தாமை தொடர்பில், கோப் (CoPE) குழுவின் உறுப்பினரான (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா எம்.பி மற்றம், கோப் குழுவின் தலைவர் கலாநிதி சரித ஹேரத் ஆகியோர் எழுப்பிய கேள்வியை அடுத்து குறித்த விடயம் தெரியவந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, கோப் (CoPE) குழுவின் தலைவர் கலாநிதி சரித ஹேரத், SPC இற்கான மருந்து வழங்கல் கையிருப்பு முகாமைத்துவம், கொள்வனவு முகாமைத்துவம் உள்ளிட்ட தேவைகளை மேற்கொள்ளக்கூடிய மென்பொருளை உருவாக்க உதவுமாறு, தொழில்நுட்ப சமூகத்திடம் திறந்த கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டில் உள்ள மருந்துப் பொருட்களின் தேவையைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தியதுடன், அத்தகைய முறையொன்றை மிகவும் துல்லியமாகப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இந்த முறையூடாக நாளாந்த மருந்துத் தேவை மற்றும் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் (SPC), சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவு (MSD) மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை (NMRA) ஆகிய நிறுவனங்களின் கொள்வனவு முறை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து வினைத்திறனாக செயற்படுவதன் அவசியம் குறித்து கோப் தலைவர் வலியுறுத்தினார். 

இந்த நிறுவனங்கள் ஊடாக நாட்டின் மருந்துத் தேவைகளைக் கண்டறிதல் மற்றும் மருந்துகள் கொள்வனவு செய்வது போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த நிறுவனங்கள் வினைத்திறனாக ஒன்றுடனொன்று தொடர்புபட்டு செயற்படுவது நாட்டுக்கு முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இருதய நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், ரேபீஸ் நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், மயக்க மருந்துகள் மற்றும் ஒவ்வாமை தொடர்பான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் அவ்வாறான அத்தியாவசிய மருந்துகளுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய மருந்துகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

அதேபோன்று, 1990 அவசர சேவையில் காணப்படும் மருந்துப் பற்றாக்குறையை நீக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற மஹிந்தானந்த அலுத்கமகே, ரஊப் ஹகீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரத்ன, (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா, (கலாநிதி) சரத் வீரசேகர, (கலாநிதி) நாலக கொடஹேவா, மதுர விதானகே, எஸ். எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment