(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டமை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் அறிந்திருந்தும் மாணவர்களுக்கு பொறுத்தமான பரீட்சை மண்டபமொன்றை தெரிவு செய்து உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்காமை மற்றும் பரீட்சைகள் சட்டத்திற்கு முரணாக பரீட்சை வினாத்தாள்களுடன் மாணவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை தொடர்பில் குறித்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எனவேதான் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே பரீட்சை மண்டபங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கம்பஹாவில் அமைக்கப்பட்டிருந்த குறித்த பரீட்சை மண்டபம் பரீட்சையை நடத்துவதற்கு பொறுத்தமற்ற இடமாகும். அதனை குறித்த பரீட்சை மண்டப பொறுப்பதிகாரியும் அறிவார்.
எனவே பரீட்சைகள் ஆரம்பமாக முன்னரே அவர் பரீட்சை மண்டபத்தினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து மாணவர்களை குடையுடன் பரீட்சையை எழுதச் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பொறுத்தமற்றது.
பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி பொறுத்தமான பிரிதொரு இடத்தை தெரிவு செய்திருந்தால் மாணவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி பரீட்சைக்கு தோற்றியிருப்பர். இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இதனால் அசௌகரியங்களை எதிர்கொண்ட குறித்த பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment