அரசாங்கம் இவ்வருடம் 5 பில்லியன் டொலர் கடனை செலுத்துவதே இலக்கு : நாட்டின் செலாவணி கையிருப்பை அதிகரிக்க மேலும் 1 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

அரசாங்கம் இவ்வருடம் 5 பில்லியன் டொலர் கடனை செலுத்துவதே இலக்கு : நாட்டின் செலாவணி கையிருப்பை அதிகரிக்க மேலும் 1 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு

அரசாங்கம் இவ்வருடம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், மேலும் நாட்டின் செலாவணி கையிருப்புகளை அதிகரிக்க மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த வர்த்தக சம்மேளன சபை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் சங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (02) இடம்பெற்ற சந்திப்பின்போது பிரதமர், இதனைத் தெரிவித்தார்.​​

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும், இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்தார்.

நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததைத் தொடர்ந்து, கடன் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு பிரதமர் இதன்போது விளக்கினார்.

நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததன் பின்னர் கடன் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க உதவும் எந்தவொரு நிதி உதவியும் IMF உடனான உடன்படிக்கையில் தங்கியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

ஜப்பானுடனான உறவுகள் கடந்தகாலங்களில் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த உறவுகளை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

மருந்துத் தட்டுப்பாடு தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதமர், அவசரமாகத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச இணைப்பு செயற்பாடுகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தலைமை தாங்குவதாக தெரிவித்தார்.

உணவுப் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், உரத்திற்கான உத்தரவாதத்திற்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடர்வதற்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்படுவதாக விளக்கினார்.

மிகை செய்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டால், அவற்றை பாதிக்கப்படக்கூடிய மட்டங்களில் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment