சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 38 இலங்கையர் கைது : கைப்பற்றப்பட்ட படகு நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 12, 2022

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 38 இலங்கையர் கைது : கைப்பற்றப்பட்ட படகு நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றது

கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 38 பேரை அவர்களை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (11) நண்பகல் அம்பாறை, ஓகந்த கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்து சோதனையிட்டுள்ளனர்.

அதற்கமைய, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் குறித்த இழுவை படகில் செல்ல முற்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் (06) உள்ளிட்ட 26 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 07 சிறுவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் இழுவை படகின் எஞ்சின் தொழில்நுட்பக் கோளாறு காணப்பட்டுள்ளதோடு, அது நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தமை மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கற்பிட்டி, உடப்புவ, ஜா-எல, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2 வயது முதல் 60 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாணம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான ஆட் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டின் எல்லையை கடக்க முயற்சித்து, இவ்வாறு சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படும் இத்தகைய சட்டவிரோத குடியேறிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவு வழங்குவதில்லை என்பதுடன், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 12 மற்றும் 15 இலங்கையர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் அவர்களை கடந்த மே 24 மற்றும் ஜூன் 09 ஆம் திகதிகளில் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது. நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகள், அதன் பின்னர் சட்டபூர்வமாக அந்நாட்டிற்கு குடிபெயர்வதற்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும்.

இவ்வாறான பழமையான மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடிக் படகுகள் தொடர்ந்தும் இவ்வாறான மனித கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான கப்பல்கள் மூலம் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்படும் போது பயணிப்போரின் உயிருக்குப் பாரிய ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment