நுகர்வோரை பதிவு செய்து வாராந்தம் எரிபொருட்களை வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை : ஜூலை முதல் வாரத்திலிருந்து திட்டம் அமுல் என்கிறார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, June 12, 2022

நுகர்வோரை பதிவு செய்து வாராந்தம் எரிபொருட்களை வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை : ஜூலை முதல் வாரத்திலிருந்து திட்டம் அமுல் என்கிறார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அளவில் ஒதுக்கீட்டை மேற்கொண்டு வாராந்தம் எரிபொருட்களை வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து குறித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நிதி நிலைமையை வலுப்படுத்தி, 24 மணி நேர மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் வரை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தடையில்லா மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் வரை, எரிபொருள் வழங்குவதை முகாமைத்துவம் செய்வது சாத்தியமற்றதாகும். நிதிக் கட்டுப்பாடுகளுடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஒரு வாரத்திற்கு அவசியமான எரிபொருளை மாத்திரமே இறக்குமதி செய்கிறது. ஆயினும் சில நுகர்வோர் தங்களது வாகனங்கள், மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட இயந்திரங்களுக்கு அவசியமான ஒரு மாதம் அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்திற்கான எரிபொருளை சேமித்து வைக்கின்றனர்.

டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மூலமான 24 மணி நேர மின்சாரத்தை வழங்க மாதத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான செலவாகிறது. எரிவாயு பற்றாக்குறை காரணமாக, மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்னர் 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மாதாந்த எரிபொருள் கொள்வனவு தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

எனவே, நாட்டின் நிதி நிலைமையை வலுப்படுத்தி, 24 மணி நேர மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் வரை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு வாரந்தாம் உறுதிப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டை மேற்கொண்டு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து குறித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment