21 ஆவது திருத்தத்தின் இறுதி வரைபு தொடர்பாக கட்சித் தலைவர்கள் உட்பட எம்.பிமாருக்கு இன்று விளக்கம் : நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெளிவூட்டுவார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

21 ஆவது திருத்தத்தின் இறுதி வரைபு தொடர்பாக கட்சித் தலைவர்கள் உட்பட எம்.பிமாருக்கு இன்று விளக்கம் : நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெளிவூட்டுவார்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாசராஜபக்‌ஷ, இன்று (02) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

இதன் பின்னர் 21ஆவது திருத்த சட்ட வரைபு திருத்தங்களை உள்வாங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள 21ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் மே 27ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது அனைத்து கட்சிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதோடு, பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் இணக்கப்பாடொன்று எட்டப்படாத நிலையில் இம்மாதம் 3ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பங்குபற்றலுடன் மீண்டுமொரு கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் 21 இல் காணப்படும் சில உள்ளடக்கங்கள் தொடர்பில் பல கட்சிகளாலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் சக்தியினால் மேலும் சில திருத்தங்களும் நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவ்வாறு இத்திருத்தம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் தெளிவற்ற நிலைமையும், இணக்கப்பாடற்ற நிலைமையும் காணப்படுகின்ற நிலையில், இன்று நிதி அமைச்சர் இது குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்குவார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் பல்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும் இத்திருத்தத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது. 

எனவே இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக சகல கட்சி உறுப்பினர்களுக்கும் வியாழனன்று நீதி அமைச்சரினால் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்போது முன்வைக்கப்படும் முக்கிய யோசனைகளை 21ஆம் திருத்தச் சட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

அதனையடுத்து அதனை இறுதி செய்வது குறித்த விசேட கலந்துரையாடலும் இடம்பெறும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இவ்வாரத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment