எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்கு வரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமுகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு வர அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில், அரச சேவையை, இணையவழி அரச சேவையாக (E Public Service) மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. காகித பயன்பாட்டை மட்டுப்படுத்த இந்த இணையவழி தொழில்நுட்பம் முக்கியமானது. இந்த நேரத்தில் நாட்டுக்காக ஒரு டொலரையேனும் சேமிப்பதற்கு அனைத்து பிரஜைகளும் உறுதியாக இருக்க வேண்டும்.
அத்துடன், நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் நெருக்கடியால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும், பொது நிலங்களிலும், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணிகளிலும் பயிரிடுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்க அதிபர்கள் உடனடியாக வகுக்க வேண்டும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment