பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் அல்ல அதிக விலைக்குக்கூட எரிபொருளை பெற்றுக் கொள்ள மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்கிறோம். நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கும் வகையிலான வாதப்பிரதிவாதங்களே பாராளுமன்றில் இடம்பெறுகிறது என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது நாட்டில் கடந்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஒழுங்கு கேள்வி எழுப்பிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது மிலேட்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் மரணத்திற்கு ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.
நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கும் வாதப்பிரதிவாதங்கள் மாத்திரமே கடந்த இரு மாத காலமாக பாராளுமன்றில் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலைமை நீடித்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக மக்களிடம் அடி வாங்க நேரிடும் என்பதை உங்களிடம் (சபாநாயகர்) தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டேன்.
ஊழல் மோசடியில் தொடர்பற்ற நாங்களும் இன்று உயிரச்சுறுத்தலுடன் வாழ்கிறோம். பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இருப்பதற்கு வீடுமில்லை, உடுத்த உடையுமில்லை.
பாராளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் ஒவ்வொரு நாட்களும் வெறுப்புணர்வை தூண்டிவிடும் வாதங்களை மாத்திரமே எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஆளும் தரப்பினரும் முன்னெடுக்கிறார்கள்.
மானிய விலையில் அல்ல அதிக விலைக்குக்கூட பாராளுமன்ற உறுப்பினர்களினால் எரிபொருளை பெற்றுக் கொள்ள மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் சென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற அளவுக்கு மக்கள் அரசியல்வாதிகள் தொடர்பில் வெறுப்படைந்துள்ளார்கள்.
ஆகவே பாராளுமன்றில் தவறான விடயங்களை குறிப்பிட்டு மக்களின் வெறுப்பினை தீவிரப்படுத்த வேண்டாம். ஆகவே பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கு முறையில் இடம்பெற்றால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றார்.
No comments:
Post a Comment