ஊடகவியலாளர்கள் மீது துன்புறுத்தல் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் : சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

ஊடகவியலாளர்கள் மீது துன்புறுத்தல் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் : சஜித் பிரேமதாச

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் மீது துன்புறுத்தல் மேற்கொண்ட சம்பவத்தை சட்டத்தை காட்டி மறைக்க முற்படக்கூடாது. இடம்பெற்ற சம்பவத்துக்காக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக்கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. அதில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சி குழுக் கூட்டம் இடம்பெற்ற பாராளுமன்ற குழு அறைக்கு அருகில் இருந்து ஊடக அறிக்கையிடல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற ஊடகவியலாளர் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சபாநாயகரின் நிலைப்பாட்டை சபாநாயகர் அறிவிப்பு செய்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற குழு அறைகளில் இடம்பெறும் எந்த கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டம் முடிவுற்ற பின்னர் அறைக்கு வெளியில் வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது வழமையான விடயம். நாங்கள் அனைவரும் அவ்வாறு செய்திருக்கின்றோம்.

தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்திருக்கின்றோம். அப்போது பாராளுமன்ற வளாகத்தில் ஊடக அறிக்கையிடல் தொடர்பான சட்டம் எதுவும் இதுவரை பின்பற்றப்படவில்லை. அதுதான் உண்மை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்கள் இருக்கின்றன. அதற்காக அறிக்கையிடும் ஊடகவியலாளர்களின் கையடக்க தாெலைபேசிகளை பறிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு செய்வது பிழையான நடவடிக்கையாகும். அதனால் ஊடக அறிக்கையிடல் சட்டத்தை காட்டி, ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தலை மறைக்க வேண்டாம்.

தவறுதலாக இடம்பெற்றதாக தெரிவித்து, இடம்பெற்ற சம்பவத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். அதன் மூலம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். அவ்வாறு இல்லாமல் இதுவரை செயற்படடுத்தப்படாத சட்டத்தை காட்டி இதனை மறைக்க எடுக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு கைவைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யாருக்கும் எந்த பேய்க்கும் அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றனர். அதனை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக மன்னிப்பு கோரி இதனை சுமுகமான முறையில் முடித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment