(நா.தனுஜா)
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையம் பற்றிய ஒப்பந்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நாம் பலமுறை கோரியிருந்த போதிலும், இறுதியில் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவராலேயே அவ்வொப்பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆகவே தற்போது திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துவதுடன் அது குறித்து விவாதிப்பதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (3) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறியபோது நாட்டின் மொத்த வருமானம் 1000 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. அதேபோன்று 2019 இல் தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டைக் கையளிக்கும்போது அதன் பெறுமதி 2000 பில்லியன் டொலர்களாகவும் வெளிநாட்டுக் கையிருப்பு 8000 மில்லியன் டொலர்களாகவும் (8 பில்லியன் டொலர்) காணப்பட்டது.
இருப்பினும் புதிய அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கடந்த தேர்தல்களில் உதவிகளை வழங்கிய பெருநிறுவனங்களுக்கு மிகையான வரிச் சலுகைகளை வழங்கியது. அதன் விளைவாக வருடாந்த வருமானம் 1300 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்ததுடன் ஆரம்பத்தில் 8 பில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு இப்போது 1.2 பில்லியன் டொலராக வீழ்ச்சி கண்டுள்ளது. மொத்த வருமானத்திலும் வெளிநாட்டுக் கையிருப்பிலும் இத்தகைய பாரிய வீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
அதுமாத்திரமன்றி அண்மைக் காலங்களில் நாட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். நாட்டில் டொலருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை. பால்மா இல்லை. எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற சூழ்நிலையில் அரசாங்கம் பாராளுமன்றக் கூட்டத் தொடரைப் பிற்போட்டிருக்கின்றது. ஏனெனில் இப்பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பாராளுமன்றத்தில் எழுப்புகின்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை.
இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் மீது நான்கு தடவைகள் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட போதிலும் பாராளுமன்றம் தொடர்ந்து கூடியது. ஆகவே விரைவாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் தமக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அத்தகைய ஒத்துழைப்பைப் பாராளுமன்றத்திற்குள்ளேயே வழங்க முடியும். ஏனெனில் பாராளுமன்றத்திற்கு வெளியே முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்திட்டத்திற்கும் அரசாங்கம் எம்மிடம் உதவிகளையோ அல்லது அபிப்பிராயங்களையோ கோருவதில்லை.
அடுத்ததாக நாடு மிகப்பாரிய கடன் சுமையை எதிர்கொண்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த 2007 ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச ரீதியில் தனியார் வங்கிகளிடமிருந்து பெருமளவான கடன்கள் பெறப்பட்டன. ஏனெனில் சர்வதேச பொதுக் கட்டமைப்புக்களிடமிருந்து கடனுதவி பெறும்போது அவற்றுக்கான நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படுவதுடன் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது பற்றிய விபரங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் தனியார் வங்கிகளிடமிருந்து பெறும் கடன்களில் அவ்வாறான சிக்கல்கள் இல்லை. இவ்வாறு பெறப்பட்ட கடன்கள் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராத அம்பாந்தோட்டைத் துறைமுகம், தாமரைக் கோபுரம் போன்ற செயற்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டன.
ஆகவே தற்போது மீளச் செலுத்த வேண்டியுள்ள கடன்களில் நூற்றுக்கு எண்பது சதவீதமானவை தற்போது ஆட்சியிலிருப்பவர்களால் கடந்த காலங்களில் பெறப்பட்டவையாகும். இந்தக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான இயலுமை இல்லாததன் காரணமாக கொழும்பு உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெறுமதி வாய்ந்த இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கண்டி போகம்பரை மைதானமும் உள்ளடங்குகின்றது.
அதேபோன்று திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கு உள்ளது. அவ்வாறிருக்கையில் பாராளுமன்றக் கூட்டத் தொடரைப் பிற்போட்டுவிட்டு, அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?
ஏற்கனவே கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நான் பலமுறை கோரியிருந்தபோதிலும், ஆளுந்தரப்பினால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இறுதியில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவராலேயே அவ்வொப்பந்தம் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஆகவே தற்போது திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறும் அதுபற்றி விவாதிப்பதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment