(நா.தனுஜா)
பௌத்த சமயத்தை ஓர் கருவியாகப் பயன்படுத்தி நாட்டிற்குள் இன, மத, மொழி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தமது அரசியல் நலன்களையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதென்பது ஒருபோதும் புத்தசாசனத்திற்கு ஆற்றுகின்ற சேவையாகாது. எனவே தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை இத்தகைய மிக மோசமான நெருக்கடிநிலைக்குக் காரணமான அரசாங்கம், அதற்கு ஒருவர் மீதொருவர் பழிசுமத்துவதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரகுமானின் 4.4 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் 'யசஸ்ஸி பியஸ' கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, பௌத்த சமயத்தை ஓர் கருவியாகப் பயன்படுத்தி நாட்டிற்குள் இன, மத, மொழி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தமது அரசியல் நலன்களையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதென்பது ஒருபோதும் புத்தசாசனத்திற்கு ஆற்றுகின்ற சேவையாகாது.
பிரிவினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டில் சுயாதீனத்துவம், சுதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன இருக்காது. மாறாக அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்கின்ற நாட்டில் அனைத்து விதமான பாதுகாப்பும் வலுவான நிலையில் காணப்படும்.
இன்றளவிலே எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது பூச்சிய நிலையிலேயே காணப்படுகின்றது. சமையல் எரிவாயு சிலிண்டர்களும் திரவ உர கொள்கலன்களும் வெடிக்கின்றபோது தேசிய பாதுகாப்பு வலுவான நிலையில் இருப்பதாக எவ்வாறு கூற முடியும்?
பால்மா, எரிபொருள் உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி புத்தாண்டுப் பரிசாக சீமெந்தின் விலையும் உயர்த்தப்பட்டது. மறுபுறம் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையில் செயற்திறன் வாய்ந்த முறையில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இவையனைத்திற்கும் காரணம் வெறுமனே கதைகளை மாத்திரம் கூறுகின்றவர்களை தேர்தல்களில் வெற்றியடைச் செய்தமையே ஆகும். மாறாக வாயால் கூறுபவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்துபவர்களுக்கு வாக்களித்திருந்தால், இத்தகைய நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்காது.
இந்நிலையில் தற்போது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இனங்களுக்கு இடையிலான ஐக்கியம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். பிரிவினையும் உள்ளகப் பிரச்சினைகளும் காணப்படுகின்ற நாட்டில் முதலிடுவதற்கு ஒருபோதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரமாட்டார்கள். அவ்வாறான நாடுகளால் வெளிநாட்டுக் கையிருப்பையும் திரட்டிக் கொள்ள முடியாது. மாறாக ஏமாற்று வேலைகளில் மாத்திரமே ஈடுபட முடியும்.
இவ்வருட இறுதிக்குள் வெளிநாட்டுக் கையிருப்பின் பெறுமதி 3 பில்லியன் டொலர்களை விடவும் உயரும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் 3 பில்லியன் டொலரை விடவும் அதிகமான வெளிநாட்டுக் கையிருப்பு தம்வசம் இருப்பதாக வெளிநாடுகளுக்குக் காண்பிப்பதற்காக ஏற்கனவே காணப்பட்ட கையிருப்பிற்கு மேலதிகமாக வட்டிக்குக் கடன் பெறப்பட்டது.
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டிருக்கின்றது. நாட்டின் சுய கௌரவமும் நன்மதிப்பும் கேள்விக்குறியாகியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஆளுந்தரப்பிலிருந்து சிலர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று வேறு சிலர் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு ஒட்டு மொத்த அரசாங்கமும் கூட்டாகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment