முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர்களுக்கு இன்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்துக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துக் கொள்ளப்படாத நிலையில் காணொளி ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அனைவரையும் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த சிறுமி கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தார்.
மேலும் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்த சிறுமியின் சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதே மாதம் 24 ஆம் திகதியன்று உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிராமத்தில் பலரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் மேலும் சிறுமியின் மைத்துணரின் தம்பியாரையும் கடந்த வாரம் கைது செய்தனர் .
சிறுமி உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் தொடர்ந்தும் கிராமத்தில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
(மாங்குளம், புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)
No comments:
Post a Comment