நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடி காரணமாகவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இதற்கு தீர்வாக எரிவாயுவை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்கான வேலைத்திட்டம் இந்த ஆண்டு வர்த்தக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கண்டியில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் வர்த்தக துறையில் பிரச்சினை இருப்பதாகவும், எரிவாயு நிறுவனங்களை கொள்வனவு செய்து ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இவ்வேளையில் சிலர் தமது வியாபார இலக்கை அடைந்துகொள்ள குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசாங்கத்தை மக்கள் விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே, ஒரு நபர் அல்லது குழு வர்த்தக நோக்கத்திற்காக மக்களை வேண்டுமென்றே நசுக்கமுன்வருவார்களானால் அந்த நேரத்தில் அரசு தலையிட்டு மக்களுக்காக உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
எரிவாயு விற்பனையை இப்போது இரண்டு பெரிய நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகின்றதாகவும் இதனை இன்னும் ஏறக்குறைய ஐந்து நிறுவனங்களாக அதிகரிக்கப்படுமானால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி மக்களுக்கு மேலும் பலனளித்திருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment