கொரோனா தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நாட்டு மக்களுக்கு சிறந்ததொரு தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் திடீரென அறிவித்துள்ளதை தான் வரவேற்பதோடு இந்த திடீர் அறிவிப்பால் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர் அதிர்ந்து போயுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து புத்தாண்டு பரிசாக இத்தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளமையை நான் வரவேற்கிறேன்.
கொரோனாவின் தாக்கத்தை வெற்றி கொண்டு நாட்டின் அபிவிருத்திப் பணிகளையும் இடைநிறுத்தாது முன்னெடுத்து வந்த இன்றைய அரசாங்கம், தற்போது இறக்குமதிப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான வரிகளை ரத்து செய்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான, ஊய்வூதியம் பெறுவோர், சமுர்த்தி பெறுவோர் மற்றும் ஏனையை கொடுப்பனவு பெறுவோர் உட்பட பல சலுகைகள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்றை நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
இதன் அடிப்படையில், அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது, அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோருக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1 கிலோ கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15 கிலோ வழங்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளமையால் மக்களுக்கு மேலும் நன்மைகள் கிடைக்க உள்ளன.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐ.ம.ச கூட்டணி இன்று அதிர்ந்து போயுள்ளதாக மர்ஜான் பளீல் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment