ஜனாதிபதி, அமைச்சர்களினால் பெருமளவான நிதி மீதப்படுத்தல் : மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னுதாரண செயற்பாடு : எதிரணியினரது கருத்துக்களையும் உள்வாங்கி விரைவில் புதியதொரு பொருளாதார திட்டம் - அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

ஜனாதிபதி, அமைச்சர்களினால் பெருமளவான நிதி மீதப்படுத்தல் : மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னுதாரண செயற்பாடு : எதிரணியினரது கருத்துக்களையும் உள்வாங்கி விரைவில் புதியதொரு பொருளாதார திட்டம் - அரசாங்கம்

ஜனாதிபதியும், அமைச்சர்களும் முன்மாதிரியாக நடந்து பெருமளவு நிதியை மீதப்படுத்தியுள்ளனர். அவ்வாறு மீதப்படுத்திய நிதியே மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறதென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இதேவேளை உகந்த பொருளாதார திட்டமொன்றை தயாரித்து முன்னெடுக்க இருப்பதாகவும் அதற்கு ஆளும் தரப்பினரது மட்டுமன்றி எதிர்த்தரப்பினரதும் கருத்துக்கள் பெறப்பட இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

இது தொடர்பில் அடுத்த வாரம் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநருடன் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

229 பில்லியன் ரூபாய் நிவாரண பொதி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இணை அமைச்சரவை பேச்சாளர்களான ரமேஷ் பத்திரண மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் பதிலளித்தனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண,

சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் நிவாரணம் வழங்க வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் உள்வாங்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் அரசாங்கத்தின் செலவீனங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன. ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் செலவுகளை குறைத்ததோடு புதிதாக வாகன கொள்வனவு, அலுவலகம் அமைப்பது, வெளிநாட்டு பயணம் செல்வது என்பன நிறுத்தப்பட்டன. எரிபொருள் செலவும் குறைக்கப்பட்டன. 

அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து பெருமளவு நிதியை சேமித்தது. ஜனாதிபதி மாத்திரம் 03 பில்லியன் ரூபாவை மிகுதிப்படுத்தினார். அவ்வாறு சேமித்த நிதியே மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது.

அரச செலவை முகாமைத்துவம் செய்து வீண்விரயத்தை குறைத்து மக்களுக்கு அவற்றை வழங்கும் இந்த திட்டம் மக்களுக்கு வெளிப்படையாக தெரியாது. ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு தொடர்பில் சிறந்த எதிர்பார்ப்புள்ளது. வெளிநாட்டு கையிருப்பு உயர்ந்துள்ளது. 

கடந்த காலங்களிலும் செலுத்த வேண்டிய கடன்களை அரசு செலுத்தியுள்ளது. எதிர்காலத்தில் வழங்க வேண்டிய கடன் மற்றும் தவணைகளை செலுத்துவோமென்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

இணை அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், பொருளாதார திட்டமொன்று அவசியம் என்பதை ஏற்கிறோம். அடுத்த வாரம் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அடங்கிய குழுவுடனும் ஆர்வமுள்ள அமைச்சர்களுடனும் மீள இது பற்றி ஆராயப்பட இருக்கிறது. 

ஆளும் தரப்பு எம்.பிக்களுடனும் இது பற்றி ஆராயப்பட இருப்பதோடு எதிர்க்கட்சிகளின் யோசனைகளும் பெறப்படும். ஆளும் தரப்பினர் மட்டுமன்றி எதிர்த்தரப்பினரையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை பெற்று உகந்த திட்டமொன்றை தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை கருத்திற் கொண்டு இந்த நிவாரணத் திட்டம் வழங்கப்பட்டது. சமுர்த்தி பயனாளர்களுக்கு சிறிய அளவிலாவது நிவாரணம் கிடைப்பது பாரிய பலமாகும். வீட்டுத் தோட்டம் அமைக்க உதவி வழங்கப்பட இருப்பதோடு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

நாம் முன்னெடுக்க இருக்கும் பாரிய திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நிவாரண பொதி வழங்கப்படுகிறது. கஷ்டமான சூழ்நிலையில் வழங்கப்படும் இந்த நிவாரணத்தை பாராட்டியாக வேண்டும். 

இதற்கு உகந்த பிரசாரத்தை ஊடகங்கள் வழங்க வேண்டும். நிரந்தரமான பொருளாதார திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.தற்போதைய நிலைமையில் கிடைத்த ஊக்கமாக இதனை ஏற்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றார்.

No comments:

Post a Comment