அரசை விமர்சித்தமையால் சுசில் பதவி நீக்கப்படவில்லை : குற்றச்சாட்டை மறுக்கிறார் அமைச்சர் டலஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

அரசை விமர்சித்தமையால் சுசில் பதவி நீக்கப்படவில்லை : குற்றச்சாட்டை மறுக்கிறார் அமைச்சர் டலஸ்

இராஜாங்க அமைச்சு பதவியிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை கவலைக்குரியது. எனினும் இது அமைச்சரவையிலோ அல்லது கட்சியில் உள்ளக மட்டத்திலோ கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானமும் அல்ல. இதற்கான காரணத்தை நாமும் அறியோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

'அரசாங்கத்திற்குள் எவரும் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ விமர்சிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை வலியுறுத்தும் வகையிலா இராஜாங்க அமைச்சு பதவியிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்?' என்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளமை அமைச்சரவையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. 

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அவரால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அத்தோடு இது கட்சியின் உள்ளக மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமும் அல்ல.

எனது நெருங்கிய நண்பன் என்ற வகையில் அவரது பதவி நீக்கம் கவலைக்குரியதாகும். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் தேவை ஏற்படின் என்னையும் பதவி நீக்க முடியும். அத்தோடு இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரையிலும் (நேற்று வரை) தெரிவிக்கப்படவில்லை.

விமர்சனங்களை முன்வைத்தமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூற முடியாது. காரணம் அமைச்சர்களாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

No comments:

Post a Comment