தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் 50 வயதுகளில் இருக்கும் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்தத் தீயினால் ஒரு கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்து, ஒரு பகுதியில் தரை முழுவதும் சேதம் அடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் இந்தத் தீ ஏற்பட்டிருப்பதோடு தண்ணீரைத் தெளிக்கும் அமைப்பு செயல்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கேப்டவுனின் பாராளுமன்ற வளாகத்தின் பல கட்டடங்களுக்கு பரவி இருக்கும் தீயை கட்டுப்படுத்த ஞாயிறு மாலை வரை தீயணைப்பு படையினர் போராடினர்.
பாராளுமன்றத்திற்குள் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பட்ரீசியா டி லில்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேகநபர் பாராளுமன்ற ஊழியர் இல்லை என்றும் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது தீவைப்பு, வீடுடைப்பு மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தத் தீ சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற கூட்டு அமர்வு திட்டமிட்டபடி மாற்று இடத்தை பயன்படுத்தி நடைபெறும் என்று சபாநாயகர் நொசிவிவ் மபிசா நிகாகுலா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment