கொவிட்-19 தொற்று சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த பாலமுனை பிரதேச வைத்தியசாலை மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமை (01) கையளிக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகரித்து காணப்பட்ட காலப்பகுதியில் கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, பாலமுனை பிரதேச வைத்தியசாலை கொவிட்-19 தொற்று சிகிச்சை நிலையமாக கடந்த 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி மாற்றப்பட்டு 1,121 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் குறைவடைந்துள்ளதால், இவ் வைத்தியசாலையை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ் வைத்தியசாலையில் வழமைபோன்று வெளிநோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, கிளினிக் சிகிச்சைகள் வழமைபோன்று நடைபெறுமென தெரிவித்தார்.
பாலமுனை பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக பாலமுனை இடைத்தங்கல் முகாமில் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், வைத்தியசாலை மாவட்ட பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஜே.எம். நௌபல் உட்பட சுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(ஒலுவில், காரைதீவு நிருபர்கள்)
No comments:
Post a Comment