டக்ளஸின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு : ஐந்துமாடி குடியிருப்பிலும் இடிதாங்கி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

டக்ளஸின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு : ஐந்துமாடி குடியிருப்பிலும் இடிதாங்கி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கமைய பாசையூர் கடற்கரைப் பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

பல தசாப்த காலமாக பாசையூர், குருநகர், சாவற்கட்டு, காக்கைதீவு, நாவாந்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கமித்து தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பகுதியாக காணப்படும் இந்த இடத்தில் வெளிச்சவீடு இன்மையால் கரையை அடையாளப்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக, கடற்றொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கடற்றொழிலாளர்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க கடற்றொழில் அமைச்சினால் குறித்த திட்டத்தை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்றிருந்த குழுவினர் குடாக்கடல் பகுதியில் ஏற்கனவே முற்றாக செயலிழந்திருக்கும் வெளிச்சவீடின் நிலைமைகளை பார்வையிட்டதுடன் அந்த இடத்திலேயே புதிதாக 30 அடி உயரமான புதிய வெளிச்சவீடு ஒன்றை கட்டுமானம் செய்வதற்கான முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

சுமார் 4 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் குறித்த கட்டுமானப் பணி சுமார் 15 நாட்களுக்குள் நிறைவுறுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் ஐந்து மாடிக் குடியிருப்புப் பகுதி மக்களின் பாதுகாப்புக் கருதி குறித்த பகுதியில் உள்ள நீர்த் தாங்கியில் இடிதாங்கி அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் குறித்த பணிகளையும் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் 5 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(யாழ்.விசேட நிருபர்)

No comments:

Post a Comment