வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 18, 2022

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

(நா.தனுஜா)

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தைப் பொறுத்த மட்டில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அது குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், லமாஹேவகே எமில் ரஞ்சன் மாத்திரமே தண்டிக்கப்பட்டிருக்கின்றார்.

ஒரேயொரு அதிகாரியை மாத்திரம் பொறுப்புக்கூறச் செய்வதும் தனியொரு நபருக்கு எதிராக மாத்திரம் மரண தண்டனை விதிப்பதும் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்த விடயங்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை என்று 5 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை இலங்கையில் தற்போதும் மரண தண்டனை பயன்பாட்டில் இருப்பதைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ள அவ்வமைப்புக்கள், மரண தண்டனையை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சமூகப் படுகொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்கஜீவ கடந்த 12 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தினால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

அதேவேளை அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மெகஸின் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் லமாஹேவகே எமில் ரஞ்சன் 33 ஆவது குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் லமாஹேவகே எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் மரண தண்டனைக்கு எதிரான ஆசிய வலையமைப்பு, உச்சபட்ச தண்டனை குறித்த நீதிச் செயற்திட்டம், மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, மொனாஷ் பல்கலைக்கழகத்தின் எலியோஸ் நீதி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய 5 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளன.

No comments:

Post a Comment