விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (22) இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சிறைச்சாலை வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (22) முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிடப்பட்டிருந்தார்.
தமது தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
தான் ஜனாதிபதியாக இருந்த வேளையில், 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 - 20 காலப்பகுதியில், கியூபா மற்றும் அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் நடுவில், இங்கிலாந்தில் இடம்பெற்ற தனது மனைவியின் கௌரவ பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல, ரூ. 1 கோடி 66 இலட்சம் (ரூ. 166 இலட்சம்) பொதுமக்கள் பணமான அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சுற்றுப் பயணத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆயினும் இதற்கு புறம்பாக செப்டெம்பர் 22, 23ஆம் திகதிகளில் வுல்ப் ஹமில்டன் பல்கலைக்கழகத்தினால் அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட கௌரவ பட்டமளிப்பு விழாவிற்காக அவர் இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார்.
குறித்த இரு தினங்களுக்கும் அரச நிதியிலிருந்து ரூ. 166 இலட்சம் பணத்தை செலவிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
ஆயினும் குறித்த பயணமானது ஆரம்பத்தில் (2023 ஓகஸ்ட் 16 ஆவணத்திற்கு அமைய) தனிப்பட்ட பயணமாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அது ஒரு வெறுமனே ஒரு பயணம் என 2023 நவம்பர் 12, டிசம்பர் 11 ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதனை உத்தியோகபூர்வ பயணமாக மாற்றும் ஆவணங்கள் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதன் மூலம் குறித்த ஆவணங்கள் குற்றத்தை மறைக்க தயாரிக்கப்பட்டவையாக இருப்பது தெளிவாவதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் நேற்றையதினம் (22) சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியபோது நீதிமன்றில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின் போதே, அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், நாடு வங்குரோத்து அடைந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த வேளையிலேயே இடம்பெற்றுள்ள இந்த பயணத்தின்போது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்க குறித்த 2 நாட்களுக்கும் ரூ. 166 இலட்சம் பணத்தை செலவிட்டுள்ளதாக அவர் மன்றில் குறிப்பிட்டார்.
இங்கு வாகன வாடகையாக ரூ. 45 இலட்சம், உணவு மற்றும் பானத்திற்கு ரூ. 3 இலட்சம், தங்குமிடத்திற்கு ரூ. 34 இலட்சம், விருந்தினர்களின் செலவுகளுக்காக 600 ஸ்ரேலிங் பவுண்ஸ், வாகனங்களுக்கு ரூ. 46 இலட்சம் என செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இந்த செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து ரூ. 132 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதோடு, இலங்கை பொலிஸ் திணைக்களத்திலிருந்தும் இலங்கை கடற்படையிலிருந்தும் ரூ. 32 இலட்சம் வழங்கப்பட்டுள்ளன.
கியூபா மற்றும் அமெரிக்க சுற்றுப் பணத்தை தொடர்ந்து லண்டன் சென்ற ரணில் விக்ரமசிங்க, குறித்த பட்டமளிப்பு விழா இடம்பெறும் இடத்திற்கு அருகில் தங்குமிட வசதிகள் இருந்த போதிலும், இலண்டனிலுள்ள லேண்ட்மார்க் எனும் பிரபல ஹோட்டலில் தங்கியுள்ளதாக திலீப பீரிஸ் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி என்பவர் அரசாங்க நிதியின் பொறுப்புதாரியே தவிர உரிமையாளர் இல்லை என தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், இவ்வாறு மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லையென மன்றிற்கு விளக்கினார்.
குறித்த பயணம் உத்தியோகபூர்மானது அல்ல தனிப்பட்டது என ரணில் விக்ரமசிங்க தம்மிடம் தெரிவிக்கவில்லையென, இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளரான சாண்ட்ரா பெரேரா வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.
எனவே பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு விசேட காரணங்கள் இல்லையென, மேலதிக சொலிசிட்டர் இங்கு குறிப்பிட்டார்.
ஆயினும் ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, குறித்த பயணம் தொடர்பான அழைப்பு இங்கிலாந்து தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வழியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வந்ததாகவும், இது உத்தியோகபூர்வமான பயணமே எனவும் குறிப்பிட்டார்.
சந்தேகநபர் சார்பில் பிணை கோரிக்கையை விடுத்த அவர், 76 வயதான தமது கட்சிக்காரர் கடந்த 7 வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டார்.
அத்துடன் முதன்முறையாக தாம் இதை அனைவருக்கும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்டார்.
அவர்களுக்கு குழந்தைகள் இல்லை, அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உள்ளதோடு, மனைவியின் அனைத்து நடவடிக்கைகளையும் தமது கட்சிக்காரரே முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் ஓகஸ்ட் 24ஆம் திகதி இந்தியாவில் பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
சிறை என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பான இடம் அல்ல என சுட்டிக்காட்டிய அவர், உரிய நிபந்தனைகளின் கீழ் தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு கோரினார்.
ஆயினும் இது தொடர்பில் நீண்ட உத்தரவொன்றை வழங்கிய கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, குறித்த விடயங்களுக்கான சிகிச்கைகளை பெறுவதில் எவ்வித தடையும் இல்லையென தெரிவித்ததோடு, குறித்த பயணமானது உத்தியோகபூர்வமானது என தெரிவிக்கும் எவ்வித ஆவணங்களும் சரியாக முன்வைக்கப்படவில்லையெனவும் அது தனிப்பட்ட பயணம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் எவ்வித விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென குறிப்பிட்டதோடு, பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழான இவ்வழக்கில் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு விசேட காரணங்களாக இங்கு எதுவும் குறிப்பிடவில்லையெனவும் குறிப்பிட்டு, அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 26 வரை விளக்கமறியல் விதிப்பதாக அறிவித்தார்.
நேற்று முற்பகல் 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையான ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்ற மிக நீண்ட வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதவான் விடுத்தர்.
இவ்வழக்கு விசாரணைகளுக்கு நடுவே, வழக்கு பல்வேறு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகவும் வழக்கு விசாரணையை முன்னெடுப்பதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை வேளையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி., முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, ரிஷாட் பதியுதீன் எம்.பி., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இந்நாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டமை மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Rizwan Segu Mohideen
No comments:
Post a Comment