வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்த யதார்த்தமான கருத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக, அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, இந்திய பிரதமருக்கு ஆவணம் அனுப்பி வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது.
வடக்கு கிழக்கை இணைப்பதற்காக தமிழ் இனவாத கட்சிகளும் முஸ்லிம் இனவாத கட்சியான முஸ்லிம் காங்கிரஸும் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நேரத்தில் அரச தரப்பு மௌனமாக இருக்கும்போது, அரசின் முக்கியமான அமைச்சர் தினேஷ் குனவர்த்தன இதுபற்றி கருத்து வெளியிட்ட மை நிம்மதியளிக்கிறது.
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் இந்த முயற்சியை கண்டிக்கும் வகையில், அறிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களை எமது கட்சி மட்டுமே நடத்தி வருகிறது.
இது பற்றிய அரசின் நிலைப்பாடு தெரியாதுள்ளது. எனினும், முஸ்லிம்கள் இவ்விணைப்பை அனுமதிக்கமாட்டார்கள் என்ற உண்மையை அமைச்சர் கூறியிருப்பதை பாராட்டுகிறோம்.
வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு நாடும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களுக்கான தாயகம் என்பதே எமது நிலைப்பாடுமாகும். இந்தச் சிறிய நாட்டுக்குள் பொலிஸ் அதிகாரத்தை ஒன்பது மாகாணங்களுக்கும் வழங்குவது, கேலித்தனமன சிந்தனையாகவே இருக்கும்.
ஐ.தே. கவின் அன்றைய அரசாங்கம் கிழக்கு முஸ்லிம்களை கேட்காமலே வடக்கு கிழக்கை இணைத்தது. இதனால்தான் வடக்கு கிழக்கில் இனவாதம் பாரியளவில் தலை தூக்கியது. மட்டுமன்றி, பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், வடக்கில் கொள்ளையடிக்கப்பட்டு விரட்டப்பட்டதையும் நாம், கண்டோம்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கிழக்கு பிரிக்கப்பட்டது. இதன் பின்னரே, வடக்கு கிழக்கில், தமிழ், முஸ்லிம் ஒற்றுமை நிலவுகிறது.
இந்த ஒற்றுமையை குழப்புவதற்காகவே தமிழ் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசும் மீண்டும் வடக்கு கிழக்கை இணைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment