(லியோ நிரோஷ தர்ஷன்)
மிகக் கடுமையான டொலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடின்மை மற்றும் சர்வதேச நிதி மதிப்பீடுகளில் வீழ்ச்சி போன்ற மோசமான பொருளாதாரம் நெருக்கடியில் இலங்கை உள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் கடுமையாக போராடி வருகின்றது. ஆனால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதில் தற்போதுள்ள அரசாங்கத்திற்குள் காணப்படும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் பிரச்சினைகளை மேலும் சிக்கல்களுக்குள் கொண்டு சென்றுள்ளன.
நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நிச்சயமாக ஏதோ ஒரு நாட்டிடமோ அல்லது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடமோ இலங்கை செல்ல வேண்டும். எங்கு செல்வது என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வருகையாகும். இதனடிப்படையில் அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது நாடு திரும்பியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்குள் தீவிரமடைந்துள்ள கருத்து முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பசில் ராஜபக்ஷவின் வருகையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்து.
குறிப்பாக ஜனாதிபதி செயலாளராக செயற்பட்ட பீ.பி. ஜயசுந்தர தனது பதவி விலகல் கடிதத்தை 31 ஆம் திகதி குறிப்பிட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இந்த விவகாரம் முக்கியமானதொன்றாகின்றது. ஜனாதிபதி செயலளராக பீ.பி. ஜயசுந்தர பதவியை தொடராவிடின் நிதியமைச்சின் முக்கிய பொறுப்பில் பணியில் அமர்த்தப்படுவார் என்பதும் உறுதியான விடயமாகின்றது.
மறுபுறம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் டெல்லிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விஜயமானது இம்மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டாலும் உத்தியோகப்பூர்வமாக திகதி இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த வகையில் இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு இந்தியா ஊடாக தீர்வு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் கொழும்பிற்கு ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய டெல்லி விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் விஜயத்தில் அந்த சந்திப்பு நிச்சயம் இடம்பெறலாம் என்று நம்பப்படுகின்றது.
நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் இலங்கைக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளதாகவே தென்படுகின்றது.
இதனடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிப்பொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவும், 400 மில்லியன் டொலர்களை இலங்கை அந்நிய செலாவணி இருப்பை பாதுகாப்பதற்கும், மேலும் 500 மில்லியன் டொலர்களை அவசர கடனுதவியாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவிடமிருந்து இந்த கடன் உதவிகள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் இலங்கை அடைந்துள்ள டொலர் பற்றாக்குறை நெருக்கடிக்கு தற்காலிக தீர்வை அடைய முடியும்.
அதே போன்று இலங்கை வாழ் தமிழர்களுக்கான இந்தியாவின் எதிர்பார்ப்பான 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுலாக்கல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட இரு தரப்பு வணிக இணக்கப்பாடுகள் என்பவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது டெல்லியின் முக்கிய வலியுறுத்தலாக அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ இலங்கை வரவுள்ளார்.
இவரது விஜயமானது ஜனவரி 8 - 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்த விஜயத்தின் போது சீன வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட உயர் மட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ள உள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே பசில் ராஜபக்ஷ டெல்லிக்கும் செல்கின்றார்.
எவ்வாறாயினும் வடக்கு தீவுகளில் உத்தேசிக்கப்பட்டிருந்த மின் திட்டம் கைவிடப்பட்டமை மற்றும் உரம் விவகாரங்களினால் சீன - இலங்கை உறவில் சிக்கல் ஏற்பட்டது.
எனவேதான் பயன்படுத்த முடியாத அந்நிய செலாவணி பாதுகாப்பு தொகையாக டொலர்களை வழங்க சீனா முன்வந்தது. இந்த அறிவிப்பினால் சஞ்சலத்திற்கு உள்ளான அரச தரப்பு பயன்படுத்த முடியாத பணம் எதற்கு என அடுத்த கட்ட முயற்சியாக இந்தியாவிடம் சென்றது. அந்த முன்னேற்றங்களின் பிரதிபளிப்பாகவே நிதியமைச்சரின் இந்திய விஜயம் அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை தொடர்ந்து டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொகையானது எந்த வகையில் இலங்கைக்கு பயன் தருமென்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் அதிகமாக உள்ளது. அதே போன்று பெய்ஜிங்கின் எதிர்பார்ப்புகள் என்ன ? போன்ற கேள்விகளும் தற்போது காணப்படுகின்றது.
ஏனெனில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சீன திட்டமான கொழும்பு துறைமுக நகரின் எதிர்காலம் உட்பட பல்வேறு முதலீடுகள் குறித்து இலங்கை மீது சீனா எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. மறுபுறம் கெரவெலபிட்டிய அனல் மின் நிலையத்தின் மீதும் சீனா ஆர்வம் கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அரசாங்கத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான நிவ் போர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2021 செப்டம்பரில், கெரவெலப்பிட்டி - 300 மெகாவாட் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான 40 வீத பங்குகளை குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த பரிவர்த்தனையின் மூலம், திறைசேரிக்கு கிட்டத்தட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும்.
ஆனால் அந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையிலேயே சீன ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எனவே சீன வெளிவிவகார அமைச்சரின் வருகையானது முக்கியமானதொன்றாகின்றது.
No comments:
Post a Comment