தமிழ் பேசும் தலைவர்களின் ஒன்றிணைவு சிங்கள மக்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிரானது அல்ல - சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

தமிழ் பேசும் தலைவர்களின் ஒன்றிணைவு சிங்கள மக்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிரானது அல்ல - சம்பந்தன்

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற, கொள்கையளவில் ஒருமித்துப் பயணிக்க கூடிய தலைவர்களின் ஒன்றிணைவானது சிங்கள மக்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிரானது அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் தலைவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படவுள்ள கூட்டு ஆவணமானது மூவினக் குழுமங்களினது கரிசனைகளை உள்ளீர்ப்பதாலேயே சிறு தாமதத்தினை எதிர்நோக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் கரிசனை கொண்ட நாடு என்ற வகையிலும், எமக்கு அயல் நாடு என்ற அடிப்படையிலும் இந்தியாவின் உதவியை நாட வேண்டிய தேவை எமக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அனுப்புவதற்காக கடந்த 21 ஆம் திகதி இணக்கம் காணப்பட்ட வரைவானது இன்னமும் இறுதி செய்யப்பட்டு தலைமைகளும் கையொப்பமிடாத நிலைமைகள் நீடிக்கின்றன.

இந்நிலையில், அது பற்றி குறித்த செயற்பாட்டிற்கு தலைமை தாங்குபவரான இரா.சம்பந்தனிடத்தில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர். அவர் தெரிவித்தவை வருமாறு,

காலத்தின் தேவை
தமிழ் பேசும் தலைமைகளின் ஒன்றிணைவானது காலத்தின் தேவையாகும். தற்போதைய அரசாங்கமானது, தமிழ் பேசும் மக்களை ஒருதலைப்பட்சமாக நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அவ்விதமானதொரு சூழலில் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தமிழ் பேசும் கட்சிகள் தமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் நீதியாக நிறைவேற்றப்படாமையின் காரணமாகவே ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை அரசாங்கத்திற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வலியுறுத்துமாறு கோருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்காக அனைவரும் ஏற்றுக் கொண்ட வரைவென்றை தயாரித்து வருகின்றோம்.

குறிப்பாக, மூவினக் குழுமங்களின் விடயங்களை உள்ளீர்ப்பதில் அதிகளவான கரிசனையைக் கொண்டுள்ளோம். அதன் காரணமாக வரைவினை இறுதி செய்வதில் சில தாமதங்கள் காணப்படுகின்றன.

தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஊடாக அத்தாமதங்களை சீர் செய்ய முடியும் என்றே கருதுகின்றோம். ஓரிரு நாட்களில் குறித்த வரைவு இறுதி செய்யப்பட்டு பின்னர் தலைவர்களால் கைச்சாத்திடப்படும்.

அச்சம் தேவையில்லை
இதேவேளை, தமிழ் பேசும் தலைவர்கள் ஒன்றிணைவதால் சிங்கள பெரும்பான்மை மக்களோ, ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்களோ அச்சமடைய வேண்டியதில்லை. தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமக தமது உரிமைகளுக்காக போரடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பலத்த வாக்குறுதிகளை மாறிமாறி வந்த அரசாங்கங்கள் முன்வைத்தாலும் அதனை அவை முழுமையான நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே முறையாக அந்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான கோரிக்கையையே நாம் முன்வைக்கவுள்ளோம்.

இந்தியாவை நாட வேண்டியதன் அவசியம்
இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் 1983ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் இந்தியா தலையீடுகளைச் செய்து வருகின்றது. அத்துடன், இந்தியா எமக்கு அயல் நாடாகும். இலங்கை வாழ் மக்களின் பூர்வீகம் இந்தியாவிலிருந்து ஆரம்பித்தமைக்கான சான்றுகளும் உள்ளன.

ஆகவே பிராந்தியத்தில் தலைமையிடத்தில் உள்ள இந்தியாவின் ஊடாகவே அத்தனை விடயங்களும் கையாளப்படுகின்றது. மேலும் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே அரசியல் சாசனத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது இனப் பிரச்சினைக்கான தீர்வாக இல்லாது விட்டாலும் அதிகாரப்பகிர்வின் முதலாவது படியாக உள்ளது. அவ்விதமான காரணங்களால் இந்தியாவின் உதவி எமக்கு இன்றும் அவசியமாகவுள்ளது.

அத்துடன் இந்தியாவின் ஊடாக எமது விடயங்களை முன்னெடுப்பது கடமையும் கூட. எனவே இந்த விடயங்கள் பக்குவமாக யாருக்கும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment