தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவண வரைவில் மீள் திருத்தம் : இறுதி செய்வதற்காக மீண்டும் தலைவர்களுக்கு அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவண வரைவில் மீள் திருத்தம் : இறுதி செய்வதற்காக மீண்டும் தலைவர்களுக்கு அனுப்பி வைப்பு

இந்திப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இனக்குழுமங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனுப்புவதற்கு தயாரிக்கப்பட்டிருந்த வரைவில் மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட வரைவானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் நேரில் கையளிக்கப்பட்டதோடு ஏனைய தலைவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப்புத்தாண்டின் முதல்நாளான நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் இல்லத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் ஒன்று கூடியிருந்தனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் காரணமாக இச்சந்திப்பில் பங்கேற்காத போதும் தமது தரப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட விடயத்தினை அனுப்பி வைத்திருந்தார்.

இதன்போது ஏற்கனவே கடந்த 21 ஆம் திகதி குளோபல் டவர் விடுதியில் வைத்து அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைமைகளின் இணக்கத்துடன் தயாரிக்கப்பட்ட வரைவில் நெருடலான விடயங்களை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் மீள் திருத்தம் செய்யப்பட்ட வரைவொன்று இறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிடுகையில், “ஏற்கனவே கடந்த 21ஆம் திகதி வரைவொன்று தலைமைகளால் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு மறுதினமான 22ஆம் திகதி அதனை செம்மைப்படுத்தி அனைத்து தலைமைகளுக்கும் அனுப்பி வைத்திருந்தேன்.

அதன் பின்னர் சில அரசியல் கட்சிகள் தமக்குள் அதுபற்றிய உரையாடல்களைச் செய்தன. அதனடிப்படையில் அவை சில விடயங்களில் கரிசனைகளை கொண்டு அவ்விடயங்கள் பற்றிய தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தன.

அதற்கு அமைவாக, சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. அதன் பிரகாரம், தமிழ் பேசும் பரப்பில் உள்ள மூவின மக்கள் குழுமங்களின் அபிலாஷைகளையும் உள்ளீர்க்கும் வகையில் வரைவொன்றை இறுதி செய்துள்ளோம். அதனை ஏனைய கட்சித் தலைவர்களின் அபிப்பிராயத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.

முன்னதாக, கடந்த 21ஆம் திகதி குளோபல் டவர் விடுதியில் கூடிய தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அச்சந்திப்பின் இறுதியில் ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பிலான வரைவொன்றை இறுதி செய்திருந்தனர்.

குறித்த வரைவானது கட்சித் தலைவர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிகளும் தமக்குள் கூடி ஆராய்ந்திருந்தன.

இதில் குறிப்பாக, இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை அமுலாக்கல் என்ற விடயமும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வும் என்ற விடயமும் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கு சிக்கலாக அமைந்தன. இதனால் கடந்த 29ஆம் திகதியன்று குறித்த வரைவினை முழுமையாக ஏற்று அக்கட்சிகளால் கையொப்பம் இடுவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் ஏற்பாட்டளர்களான ரெலோவினால் மீண்டும் கட்சிகளுடன் குழுக்குழுவான சந்திப்புக்கள் நடத்தப்பட்டன. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விக்னேஸ்வரனுடம் செல்வம், சித்தார்த்தன் ஆகியோர் சந்திப்புக்களை நடத்தினார்கள். சம்பந்தன், ரவூப் ஹக்கீம், ஆகியோருடன் மனோ கணேசன் சந்திப்புக்களை நடத்தினார். இவ்வாறு பலதரப்பட்ட சந்திப்புக்கள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ந்தன.

அவற்றின் விளைவாக, நேற்றுமுன்தினம் சம்பந்தனுடன் முக்கியமான சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் செல்வம் அடைக்கலாநதன், சித்தார்த்தன், சுமந்திரன், கு.சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட வரைவில் தமக்குள்ள கரிசனைகளை வெளியிட்டது. அதேபோன்று மனோ கணேசன் தரப்பிலும் கரிசனைகள் வெளியிடப்பட்டன.

அச்சமயத்தில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அங்கீகாரமளித்த விடயங்களை வரைவிலிருந்து மீளப் பெற முடியாது என்பதில் சுமந்திரன் உறுதியாக இருந்தார். அதனை சம்பந்தனுக்கும் கூறினார். இச்சமயத்தில் சுரேந்திரன், சுமந்திரன் இடையே வாதப்பிரதிவாங்கள் வலுத்திருந்தன.

இந்நிலையில், சம்பந்தன், மூவினக் குழுமங்களின் விடயங்களையும் உள்வாங்கிய அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்ற கூட்டு ஆவண வரைவொன்றை இறுதி செய்வதே பொருத்தமானது என்று குறிப்பிட்டார். அவருடைய முன்மொழிவு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாகவே சுமந்திரனின் இல்லத்தில் நேற்றையதினம் ஏனைய தலைவர்கள் கூடி ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட வரைவு மற்றும் தமிழரசுக் கட்சியின் வரைவு, ரெலோ உள்ளிட்ட தரப்புக்களால் தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளிட்டவற்றை மையப்படுத்திய மீள் திருத்தம் செய்யப்பட்ட வரைவொன்றை இறுதி செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த வரைவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் மீளமைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கு ஏற்பட்டிருந்த கரிசனைகள் களையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதநேரம் ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பும் ‘ஆட்சி அதிகாரப் பகிர்வினை’ அடியொற்றியதாக அமையும் என்றும் தெரிவருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னைய வரைவில் கையொப்பமிட முடியாது என்று தெரிவித்திருந்ததோடு கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்கட்சியினருக்கு தற்போது மீள் திருத்தம் செய்யப்பட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேசரி

No comments:

Post a Comment