(எம்.ஆர்.எம்.வசீம்)
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக்கு 30 வீதம் மேலதிகமாக சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கொண்டுவரவேண்டி ஏற்படுகின்றது. அதற்காக நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் டொலர் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்க வேண்டி ஏற்படுகின்றது. அத்துடன் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு டொலர் பிரச்சினை காரணமல்ல. மாறாக புதிய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே காரணமாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சப்புகஸ்கந்த சுத்திரகரிப்பு நிலையத்துக்கு தேவையான மசகு எண்ணெய்யை விடையத்துக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில உரிய காலத்துக்கு வழங்காததால் இரண்டு மாதங்களில் இரண்டு தடவைகள் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 52 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆசியாவில் இருக்கும் பழைமை வாய்ந்த சுத்திகரிப்பு நிலையமாகும். அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பெரல் ஒன்றையும் விட மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் மூலம் நூற்றுக்கு 15 வீதம் லாபம் பெற முடியும் என அமைச்சர் உதய கம்மன்பிலவே அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நேற்று முதல் மீண்டும் மூடப்பட்டிருப்பதால், நூற்றுக்கு 30 வீதம் மேலதிகமாக சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கொண்டுவர வேண்டி ஏற்படுகின்றது. அதற்காக ஒரு பெரலுக்கு நுற்றுக்கு 15 வீதம் வழங்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் டொலர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்க வேண்டி ஏற்படுகின்றது.
இந்த வருடம் மார்ச் மாதம் வரை எமக்கு மசகு எண்ணெய் வழங்கும் ஒப்பந்தத்தை, அமைச்சரும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மற்றும் அதிகாரிகள் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தாெடர்ச்சியாக மசகு எண்ணெய் வழங்கி வந்த நிறுவனத்துக்கு வழங்காமல், நைஜீரிய நாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டதாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவர்களின் மோசமான ஒப்பந்தம் காரணமாக எமக்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து முறையாக சமகு எண்ணெய் கிடைக்கவில்லை. அதன் காரணமாக அவசர விலை கோரல் மூலம் இரண்டு முறை மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டது. அதற்காக வழமையான விலையை விடவும் அதிக டொலர் செலுத்த வேண்டி ஏற்பட்டது.
அத்துடன் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக தற்காலிகமாக சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானித்ததாகவே கடந்த டிசம்பர் மாதம் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும்போது அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் டொலர் பிரச்சினை காரணமாகவே சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதாக தற்போது அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
எனவே அமைச்சர் உதய கம்மன்பில இந்த அமைச்சை பொறுப்பேற்றது முதல் திருகோணமலை துறைமுக 99 எண்ணெய் குதங்கள் தொடர்பாகவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுத்தமை தொடர்பாகவும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் பாரிய பொய்யே தெரிவித்து வந்ததுடன் நாட்டின் வளத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வந்தார்.
பழைமை வாய்ந்த இந்த நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாக அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு 10 வீதம் எரிபொருள் அதிகரிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் சமகு எண்ணெய்யும் அதிகரிக்கப்படுகின்றது. அதற்கு முகம்கொடுக்கும் வகையிலேயே ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.
அந்த நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதன் விளைவாகவே வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத வகையில் மசகு எண்ணெய் இல்லாமல் சப்புகஸ்கந்த சுத்திரகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு இல்லாமல் டொலர் பிரச்சினை காரணம் இல்லை என்றார்.
No comments:
Post a Comment