ஆட்சிபீடமேறியதன் பின் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலகுபடுத்துவதே நோக்கம் : பொதுவாகவே அரசியல்வாதிகள் நன்கு பேசக்கூடிய வாய்ச் சொல் வீரர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

ஆட்சிபீடமேறியதன் பின் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலகுபடுத்துவதே நோக்கம் : பொதுவாகவே அரசியல்வாதிகள் நன்கு பேசக்கூடிய வாய்ச் சொல் வீரர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

எதிர்க்கட்சியில் இருந்தவாறு நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அவசியமான டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்குகின்ற செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். அதன் மூலம் நாம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது செயற்திட்டங்களை விரைவுபடுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, செவ்வாய்க்கிழமை நிலாவெளி சம்பல்தீவு தமிழ் பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு அவசியமான டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, திருகோணமலையில் சில பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியிருப்பதன் மூலம் இங்குள்ள மாணவர்கள் செயற்திறனான முறையில் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நானும் பங்களிப்புச் செய்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

நாடளாவிய ரீதியிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அவசியமான டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்திட்டத்தை எமது கட்சி ஆரம்பித்திருக்கின்றது.

பொதுவாகவே அரசியல்வாதிகள் நன்கு பேசக்கூடிய வாய்ச் சொல் வீரர்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறுகின்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதென்பது மிகவும் அரிதான விடயமாகும்.

ஆனால் நாம் எதிர்க்கட்சியில் இருந்தவாறு பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்குகின்ற செயற்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். அதன் மூலம் நாம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டத்தை விரைவுபடுத்தி எமது இலக்கை அடைந்துகொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நாட்டின் ஆட்சியாளர்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலமாகவே தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படக் கூடியவர்கள் நாட்டிற்கு சேவையாற்றுவதுடன் நாட்டைக் கட்டியெழுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

அத்தகைய எதிர்பார்ப்பிலேயே மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஆட்சியாளர்களிடம் நாட்டைத் தற்காலிகமாகக் கையளிக்கின்றார்கள். ஆனால் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள், நாட்டின் உரிமையை தமக்கு எழுதிக் கொடுத்ததைப்போன்று செயற்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

அதன்படி நாட்டின் பெறுமதி வாய்ந்த வளங்களையும் தேசிய சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யும் செயற்பாடுகள் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் மிகப்பாரிய ஊழல் மோசடிகளால் பிரபல்யமடைந்த அரசாங்கமாகும். இருப்பினும் நாம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எந்தவொரு ஊழல் மோசடிகளுக்கும் இடமளிக்காமல், நாட்டைக் கட்டியெழுப்புவதை மாத்திரம் ஒரே இலக்காகக் கொண்டு செயலாற்றத் தயாராக இருக்கின்றோம்.

ஊழல் மோசடிகளை முற்றாக இல்லாதொழிப்பதன் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும் என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment