(எம்.மனோசித்ரா)
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதென்பதை தற்போது சாத்தியமான விடயமாகக் கருத முடியாது. ஆனால் பொருட்களுக்கு ஏற்படக் கூடிய தட்டுப்பாடுகளை தவிர்க்கும் வகையிலேயே வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, 'இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டுள்ளமையால், எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்க முடியுமா?' என்று கேட்ட போது அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு பதலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றமை இலங்கையில் மாத்திரம் காணப்படும் நிலைவரம் அல்ல. முழு உலகிலும் இந்த நிலைமையே காணப்படுகிறது.
எமது ஏற்றுமதி போகங்களின் வருமானம் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதி செய்யும் நாடு என்ற வகையில் உலகில் சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் போது அதன் சூடு இலங்கையிலும் உணரப்படும்.
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது அவற்றை இறக்குமதி செய்வதன் ஊடாக விலைகள் கட்டுப்படுத்தப்படும். எனினும் இன்று உலகலாவிய ரீதியிலான விநியோகமும் முற்றாக சரிவடைந்துள்ளது.
எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய தேவை காணப்பட்டாலும், அதற்கு பொருட்களும், அந்நிய செலாவணி இருப்பும் இல்லை. எனவே முன்னைய காலங்களைப் போன்று பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது இறக்குமதி செய்வதன் ஊடாக விலைகளைக் கட்டுப்படுத்தும் திறன் தற்போது அரசாங்கத்திற்கு இல்லை.
எனவேதான் பொருட்களின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அதனால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி பணவீக்கம், வாழ்க்கை செலவு என்பவற்றினை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின் இலக்காகவுள்ளது.
No comments:
Post a Comment