மக்களுக்கு நிவாரணம் வழங்க இதுவே உகந்த காலம் : மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

மக்களுக்கு நிவாரணம் வழங்க இதுவே உகந்த காலம் : மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

மக்களுக்கு நிவாரணம் வழங்க இதுவே உகந்த தருணம் என்பதால் அரசாங்கம் நிவாரண பொதியொன்றை வழங்க தீர்மானித்தது. உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை குறைப்பதற்காக வீட்டுத் தோட்டங்களில் பயிற்செய்கை மேற்கொண்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உணவு தட்டுப்பாடு வராமல் அவர்களும் பங்களிப்பு செய்வதோடு வீண்விரயத்தை குறைத்து சிக்கனமாக செயற்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விசேட ஊடகவியலாளர் மாநாடு நிதி அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு 229 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் செலவுகளை குறைத்து முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்தோடு 6,66,480 ஓய்வூதியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கும் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படும். ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.75 உத்தரவாத விலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் அறுவடை வீழ்ச்சியடைந்தாலும் இதன் மூலம் அதனை ஈடு செய்ய முடியும். 

இதேவேளை, 20 பேர்ச் காணியில் வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கும் குறைவான 20 பேர்ச்களுக்கு மேலுள்ள வீட்டுத் தோட்டங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 06 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே தொகையை இரு தரப்பினருக்கும் திரும்ப வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி மாதாந்தம் கிலோ ஒன்று 80 ரூபா என்ற விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ கோதுமை மாவை நிவாரண விலையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் முழு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதேபோல், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதற்காக நிதியளிப்பு வழங்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக அமைச்சர் குழுக்களை நியமிக்கவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார். இது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டது. 

கொவிட்19 பிரச்சினையுடன் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

சகல அரச ஊழியர்களுக்கும் 5,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கும். 

தனியார் துறைக்கும் இதற்கு ஏற்றவகையில் கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முதலாளிமார்களுடன் பேசுமாறு தொழில் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறைக்கும் மேலதிக கொடுப்பனவு கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.

கொவிட்19 காலப்பகுதியில் நாடு முடக்கப்பட்ட போதும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகளின் அறுவடை 20 முதல் 30 வீதத்தினால் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கிலோ நெல்லுக்கு மேலதிகமாக 25 ரூபா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி மற்றும் பழங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் வீட்டுத் தோட்டங்கள் அமைத்து பயிரிட நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 31 பில்லியன் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு விதிக்கப்படும் வரியை முற்றாக அகற்றி பெயரளவிலான வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வரி நீக்கம் செய்யப்படும். 

உள்நாட்டில் அறுவடை சந்தைக்கு வரும் போது இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். அரசாங்கம் புதிதாக எந்த வரியும் விதிக்காது.

இவை தொடர்பிலான சுற்றுநிருபங்களை வெளியிடுவது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்.

அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வருமானம் கிடைக்கும் துறைகளினூடாக எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் 14 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரிவதற்கு செல்வோர் தொகை குறைந்துள்ளது. 2,30000 பேர் வருடாந்தம் வெளிநாடு சென்று வந்தார்கள். இந்த வருடம் 03 இலட்சம் பேர் வெளிநாடு செல்வர் என எதிர்பார்க்கிறோம்.

சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. இந்த வருடம் 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருவரென எதிர்பார்க்கிறோம். 15துறைகளில் அதிக வருமானம் எதிர்பார்க்கிறோம்.

மோசடி வீண்விரயம் என்பவற்றை குறைத்து கஷ்டத்திற்கு மத்தியிலும் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறோம். 6 மாத காலத்தில் அமைச்சுக்களின் செலவுகளை குறைத்து 53 பில்லியன் ரூபா சேமித்துள்ளோம். வீண் விரயங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்துள்ளது.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உடன் பேசி வருகிறோம். சீனா, ஐப்பான், இந்தியா போன்ற நாடுகளுடனும் பேசி வருகிறோம்.இதற்காக அமைச்சர்கள் சிலரை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment