எண்ணெய்த் தாங்கிகளையும் அதனை அண்மித்த இடங்களையும் தமக்கு வழங்குமாறு இந்தியா நிபந்தனை விதித்திருக்கக்கூடும் : பாராளுமன்றத்தில் கம்மன்பிலவிடம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தேன் - கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

எண்ணெய்த் தாங்கிகளையும் அதனை அண்மித்த இடங்களையும் தமக்கு வழங்குமாறு இந்தியா நிபந்தனை விதித்திருக்கக்கூடும் : பாராளுமன்றத்தில் கம்மன்பிலவிடம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தேன் - கபீர் ஹாசீம்

(நா.தனுஜா)

இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்கவுள்ள நிலையில், அதற்குப் பதிலாக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் மற்றும் அதனை அண்மித்த இடங்களைத் தமக்கு வழங்குமாறு நிபந்தனை விதித்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், தற்போது திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் சட்ட ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ எமது நாட்டினால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை பாராளுமன்றத்தில் அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தேன்.

அந்த எண்ணெய்த் தாங்கிகள் உத்தியோகபூர்வமாக இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை. மாறாக கடந்த 2003 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஊடாக புரிந்துணர்வு ஒப்பந்தக் கடிதமொன்றின் ஊடாக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இருப்பினும் குறித்த எண்ணெய்த் தாங்கிகளை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதெனின் 6 மாத காலத்திற்குள் அதுபற்றிய உத்தியோகபூர்வ ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட வேண்டும் என்று அந்த புரிந்துணர்வு ஒப்பந்தக் கடிதத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அவ்வாறான உத்தியோகபூர்வ ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடாததன் காரணமாக இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய்த் தாங்கிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இலங்கைக்குக் காணப்பட்டது.

எனவே 2005 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க - மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அந்த எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படவில்லை என்றுகூறி அவற்றை மீளப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.

மாறாக அந்த இடத்தில் மேலும் எரிபொருள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் இந்தியாவிற்கு அனுமதியளித்து, அதற்குப் பதிலாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அதேபோன்று இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பில் எந்தவொரு விடயமும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அவ்வாறிருக்கையில் தற்போதைய அரசாங்கம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கு மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் திட்டமிடுவதற்கான பின்னணிக் காரணம் என்ன?

அதுமாத்திரமன்றி ஏற்கனவே இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய்த் தாங்கிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையிலேயே, தற்போது மேலும் சில எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது.

திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளில் 24 தாங்கிகள் மீண்டும் நாட்டிற்குக் கிடைக்கப் போவதாகவும் இது மிக முக்கியமான வெற்றி என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகின்றார். ஆனால் அவற்றை இந்தியாவிடமிருந்து மீட்டெடுத்ததைப்போன்று பெருமை கொள்வதற்கு முன்னர், அவை எந்தவொரு தரப்பினருக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுமாத்திரமன்றி மேலும் 14 எண்ணெய்த் தாங்கிகள் 50 வருட காலத்திற்கு இந்தியாவிற்குக் குத்தகைக்கு வழங்கப்படவிருப்பதாகவும் 61 எண்ணெய்த் தாங்கிகளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51 சதவீத பங்குகள், இந்தியாவிற்குச் சொந்தமான இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகள் என்ற அடிப்படையில் வழங்கி இணைந்து நிர்வகிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் வசமுள்ள எண்ணெய்த் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான போதியளவு நிதியைத் தம்மால் திரட்டிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறியிருப்பதுடன், அதற்கு அவரால் வழங்கப்பட்டுள்ள விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் திருகோணமலையிலுள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான நிதியை 40 நாட்களில் திரட்டிக் கொள்ள முடியும். அவ்வாறிருக்கையில் அவற்றை இந்தியாவிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன?

அதேபோன்று திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைத் தயாரிக்குமாறு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் கடிதமொன்றை அனுப்பி வைத்திருப்பதுடன் அப்பகுதியில் நில அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்குமாறும் மற்றொரு அதிகாரியினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் கூறுவதுபோன்று இந்தியாவிற்கு ஏற்கனவே எண்ணெய்த் தாங்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றது என்றால், மீண்டும் அது குறித்து ஒப்பந்தமொன்றைத் தயாரித்து அதில் கைச்சாத்திட வேண்டிய அவசியமென்ன?

மேலும் இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் அதற்குப் பதிலாக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் மற்றும் அதனை அண்மித்த இடங்களைத் தமக்கு வழங்குமாறு இந்தியாவினால் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நாம் கருதுகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த தேர்தல்களின்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றவா என்பது குறித்து பொதுமக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி சிலர் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே அதன் செயற்பாடுகளை விமர்சிக்கின்றார்கள். அவர்களுக்கு முதுகெலும்பு இருப்பின், அரசாங்கத்திலிருந்து வெளியேறி விமர்சனங்களை முன்வைக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

அத்தோடு இவ்வருடம் இரண்டு தேர்தல்களை நடாத்த வேண்டியுள்ள நிலையில், அதற்குப் போதுமானளவு நிதி அரசாங்கத்திடம் இருக்கின்றதா என்பதும் சந்தேகத்திற்குரிய விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment