எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில், ஒவ்வொரு எரிவாயு சிலிண்டருக்கும் 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி ஏதும் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டால் 1311 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் திசார ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தபோது, வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தாலும் கலவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று உறுதிபடத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வழக்கு பதிந்துள்ளது எனவும் தற்பொழுது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மேற்பார்வையுடனே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே சகல எரிவாயு சிலிண்டர்களும் 10 இலட்சம் ரூபாவிற்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
இது தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கீழேயே லிட்ரோ கேஸ் நிறுவனம் உள்ளதால், அக்காப்புறுதி ஊடாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை இன்றும் (06) பல பகுதிகளில் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததனை அறிய முடிகிறது.
எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய இரு கப்பல்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றில் முறையே 3,700 மற்றும் 3,200 மெற்றிக் தொன் கேஸ் எடுத்து வரப்பட்டுள்ளதோடு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கப்பலில் உள்ள எரிவாயுவின் தரத்தை பரீட்சிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(ஷம்ஸ் பாஹிம்)
No comments:
Post a Comment