(இராஜதுரை ஹஷான்)
எதிர்வரும் 05ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இக்கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 17.44 சதவீத கட்டண அதிகரிப்பு நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி புதிய கட்டண திருத்தத்திற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாவினாலும், அதி கூடிய கட்டணம் 194 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்து கட்டண அதிகரிப்பு கடந்த மாதம் 29 ஆம் திகதி மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணம் 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
தற்போது (இன்று) 14 ரூபாவாக உள்ள குறைந்தப்பட்ச பேருந்து கட்டணம் 17 ருபாவாகவும், 1,109 ரூபாவாக உள்ள அதிகூடிய பேருந்து கட்டணம் 1,303 ரூபாவாகவும் நாளை மறுதினம் முதல் அறவிடப்படும்.
கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான அதி சொகுசு பேருந்து கட்டணம் 1,940 ரூபாவாகவும், கொழும்பு தொடக்கம் பருத்திதுறைக்கான அதி சொகுசு பேருந்து கட்டணம் 1,910 ரூபாவாகவும், கொழும்பு - கல்முனை அ.சொ.பே கட்டணம் 1,680 ரூபாவாகவும், கொழும்பு –மட்டக்களப்பு அ.சொ.பே.கட்டணம் 1,500 ரூபாவாகவும், கொழும்பு - அக்கரைப்பற்று அ.சொ.பே.கட்டணம் 1,790 ரூபாவாகவும், கொழும்பு – திருகோணமலை அ.சொ.பே.கட்டணம் 1,260 ருபாவாகவும் மற்றும் கொழும்பு – காங்கேசன்துறை அ.சொ.பே. கட்டணம் 1,970 ரூபாவாகவும் கொழும்பு - பதுளை அ.சொ.பே.கட்டணம் 1,250 ரூபாவாகவும், கொழும்பு - பசறை அ.சொ.பே.கட்டணம் 1,360 ரூபாவாகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment