(இராஜதுரை ஹஷான்)
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு காலம் போதாது. சிறுபோக விவசாயத்திற்கே இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய முடியும். சேதனப் பசளைத் திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல சுகாதாரத்துறை அமைச்சும், சுற்றுலாத்துறை அமைச்சும், ஜனாதிபதி செயலணியும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சேதனப் பசளைத் திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு சுகாதாரத்தறை அமைச்சும், விவசாயத்துறை அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இரசாயன உர பயன்பாட்டினால் மனித உடலாரோக்கியத்திற்கும், மண் வளத்திற்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு இதுவரை காலமும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சேதனப் பசளைத் திட்ட கொள்கையை செயற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை.
அனைத்து சவால்களையும் விவசாயத்துறை அமைச்சு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சேதனப் பசளைத் திட்டத்தை நிச்சயம் சிறந்த முறையில் செயற்படுத்துவோம்.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு காலம் போதாது. சிறுபோகத்திற்கே இரசாயன உரம் இறக்குமதி செய்ய முடியும்.
சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் நிதி செலுத்தல் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் தற்போது குறிப்பிடப்படுகின்றன.
இலங்கை கோரும் தரத்திற்கமைய உரத்தை விநியோகிக்குமாறு குறித்த சீன நிறுவனத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட சீன நிறுவனத்தை ஒருபோதும் மீளப் பெறபோவதில்லை என்றார்.
நாரஹேன்பிட்ட வார சந்தையில் கறிமிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ஆயிரம் ரூபாவிற்கும், வெண்டிக்காய்க்காய் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவிற்கும், போஞ்சி ஒரு கிலோ கிராம் 520 ரூபாவிற்கும், கோவா ஒரு கிலோ கிராம் 480 ரூபாவிற்கும், கரட் ஒரு கிலோ கிராம் 480 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ கிராம் 450 ரூபாவிற்கும், லீக்ஸ் ஒரு கிலோ கிராம் 440 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
உரப் பிரச்சினை காரணமாக மரக்கறிகளின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது அதனால் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மரக்கறிகளிலும் செல்வந்தர்கள் உண்ணும் மரக்கறி, ஏழை மக்கள் உண்ணும் மரக்கறி என தற்போது தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
கறிமிளகாய், போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளை ஏழை மக்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட்டக்காய், மாங்காய் உள்ளிட்ட விலை குறைவான மரக்கறிகளை கொள்வனவு செய்கிறோம். ஒரு சில மரக்கறிகளை 100 கிராம் அளவிலேயே வாங்குகிறோம் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment