(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரவு செலவு திட்ட மானியங்களுக்கு மேலதிகமாக கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் மாத்திரம் 181 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய நிதியை இதுவரையில் செலவழித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பூஸ்டர் செயலூட்டி தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய மதிப்பீட்டுக்கமைய 145 இலட்சம் தடுப்பூசிகள் அவசியமாகும். பெரும்பாலான பூஸ்டர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
எதிர்வரும் இரண்டு மாத காலத்திற்குள் 145 இலட்சம் பூஸ்டர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்படும். கொவிட் பரவலை கட்டுப்படுத்தவும், தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கவும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை உலக சுகாதார தாபனம் வரவேற்றுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1 இலட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளில் சிகிச்சை வழங்கப்படுகின்றன. அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களினால் பாரிய விளைவுகளை தடுக்க முடிந்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் மாத்திரம் வரவு செலவு திட்ட மானியங்களுக்கு மேலதிகமாக 181 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment