தேர்தல்களின்போது அரசியல் கட்சிகளால் செலவிடப்படும் நிதியை முகாமை செய்வதற்கான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் ? - கூட்டாக வலியுறுத்தியுள்ள அலி சப்ரி, ஹர்ஷ டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி, மஞ்சுள கஜநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

தேர்தல்களின்போது அரசியல் கட்சிகளால் செலவிடப்படும் நிதியை முகாமை செய்வதற்கான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் ? - கூட்டாக வலியுறுத்தியுள்ள அலி சப்ரி, ஹர்ஷ டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி, மஞ்சுள கஜநாயக்க

(நா.தனுஜா)

நாட்டில் இடம்பெறும் தேர்தல்களின்போது பிரசார நடவடிக்கைகள் உள்ளடங்கலாக குறித்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளால் செலவிடப்படும் நிதியின் அளவை முகாமை செய்வதற்கான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல்களின்போது பிரசார நடவடிக்கைகள் உள்ளடங்கலாக குறித்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளால் செலவிடப்படும் நிதியின் அளவை வரையறுத்தல், முகாமை செய்தல் மற்றும் தேர்தல் காலத்தில் கட்சிகளின் நிதிப் பயன்பாட்டைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான சட்டம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 'அரசியலில் பெருந்தொகைப் பணம்' என்ற தலைப்பில் முற்போக்கு வலையமைப்பினால் கடந்த வியாழக்கிழமை மாலை கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கலந்துரையாடலில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நீதியமைச்சர் அலி சப்ரியும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியும் பங்கேற்றிருந்ததுடன் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சள கஜநாயக்கவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது தேர்தல்களின்போது ஒவ்வொரு கட்சிகளின் சார்பிலும் களமிறங்கும் வேட்பாளர்கள் உள்ளடங்கலாக அரசியல் கட்சிகளினால் தேர்தல் வெற்றியை முன்னிறுத்தி செலவிடப்படும் நிதியினளவை மட்டுப்படுத்துவதுடன் அதனைக் கண்காணிப்பதற்கான சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பங்கேற்பாளர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வருமாறு

அலி சப்ரி
தேர்தலின்போது அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்படும் நிதியை முகாமை செய்வதற்கான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் நான் உடன்படுகின்றேன். தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சிவில் மற்றும் அரசியல் சட்டங்களில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, புதிய சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மேற்குறிப்பிட்டவாறான சட்டத்தின் அவசியம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.

அதேவேளை தேர்தல்களில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களைப் பகிரங்கப்படுத்தும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்திய நிதியினளவை மதிப்பீடு செய்வதும் அவசியமாகும்.

இருப்பினும் இவ்வாறானதொரு சட்டத்தை உருவாக்கும் போது அது நேர்மறையானதும் எதிர்மறையானதுமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் தாம் நேர்மையாக உழைத்த பணத்தை தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துபவர்களை இது பாதிக்கக்கூடும். ஆகவே அனைத்துத் தரப்பினரதும் அபிப்பிராயங்களைக் கேட்டறிவது மிகவும் அவசியம். அதுமாத்திரமன்றி ஒரு சட்டத்தைத் தயாரிப்பதென்பது மிகவும் நீண்ட பொறிமுறையாகும். அதற்கு குறைந்தபட்சம் 9 - 12 மாதங்களேனும் தேவைப்படும்.

ஹர்ஷ டி சில்வா
தேர்தல்களில் கறுப்புப் பணத்தின் பயன்பாட்டை முடிவிற்குக்கொண்டு வருவதற்கு ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவது அவசியமாகும்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்படும் நிதியை முகாமை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதவையாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இச்சட்டத்தை உருவாக்க முடியாமல் போனது. முதலாவதாக இவ்வாறான சட்டங்களை உருவாக்கும்போது அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. குறிப்பாக தேர்தல்களை நியாயமான முறையில் நடத்தவதற்கான அதிகாரமும் இடைவெளியும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் காணப்பட்டது.

ஆனால் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. புதிதாக சட்டமொன்று உருவாக்கப்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறான அடிப்படை அம்சங்களும் இடைவெளியும் காணப்பட வேண்டும். இருப்பினும் 20 ஆவது திருத்தத்தின் விளைவாக அவை இல்லாமல் போயிருக்கின்றன.

அதேபோன்று தேர்தல்களில் களமிறங்கும் வேட்பாளர்கள் அவர்களது சொத்து விபரங்களைப் பகிரங்கப்படுத்துவது பற்றி பேசப்பட்டது. கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் உட்பட வெறுமனே 12 பேர் மாத்திரம் நாமாகவே முன்வந்து எமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினோம். இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் அதனைச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரங்கள் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தியதாகவே அமையும். ஆகவே தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் நிதியினளவு குறித்து மாத்திரமன்றி, சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார மீறல்கள், முறைகேடுகள் குறித்துக் கண்காணிப்பதற்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றியும் சிந்திக்கவேண்டும்.

சுனில் ஹந்துனெத்தி
தற்போது பேசப்படுகின்ற விடயங்கள் ஏற்கனவே எமது கட்சியினால் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக எமது கட்சியைப் பொறுத்தமட்டில் தேர்தல்களின்போது பிரசாரங்களுக்காக வேட்பாளர்கள் பணத்தைத் தனித்தனியாக செலவிடுவதில்லை. மாறாக வேட்பாளர்கள் அனைவருக்கும் கட்சியினாலேயே பணம் செலவிடப்படும். அதன் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பான கணக்கறிக்கை தயாரிக்கப்படுவதுடன் அது கட்சியின் ஆண்டறிக்கையுடன் இணைக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்படும்.

எம்மைப் பொறுத்தவரை தேர்தல் பிரசாரங்களின்போது வழங்குகின்ற வாக்குறுதிகளை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் நிறைவேற்றுவதற்குத் தவறும் பட்சத்தில் அது குறித்து மக்கள் அடிப்படை மீறல் மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையிலான சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதை வெகுவாகக் குறைத்துக் கொள்ள முடியும். இவற்றைக் கருத்திற் கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மஞ்சுள கஜநாயக்க
தேர்தலில் பயன்படுத்தப்படும் நிதியை முகாமை செய்தல் தொடர்பான சட்ட வரைபு உள்ளடங்கலாக ஏனைய விடயங்கள் சார்ந்த சட்டவரைபைத் தயாரிக்கக் கூடிய அலி சப்ரி போன்ற போதிய தேர்ச்சியுடையவர்கள் இருக்கின்றபோது, அத்தகைய பொறுப்புக்கள் எவ்வகையிலும் பொருத்தமற்ற சில நபர்களிடம் ஒப்படைக்கப்படுவது கவலையளிக்கின்றது.

எது எவ்வாறெனினும் இத்தகைய சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும்போது மக்கள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாத்தறையில் பெருந்தொகை நிதியை செலவிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, எவ்வித அரசியல் தேர்ச்சியுமற்ற ஒருவரைத் தெரிவு செய்த மக்கள், பாராளுமன்றத்தில் கோப் குழுவின் தலைவராக செயற்பட்டு பல்வேறு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்திய சுனில் ஹந்துனெத்தியைப் புறக்கணித்து விட்டார்கள். அது மக்களின் உரிமையெனும் பட்சத்தில், 'பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் தியவன்னா ஓயாவிற்குள் தள்ள வேண்டும்' என்று அவர்கள் கூறாமலிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment