(இராஜதுரை ஹஷான்)
கட்டாய விடுமுறை தொடர்பில் நிறுவன சட்டக் கோவையின் 12 ஆம் பிரிவின் 20.1 மற்றும் 20.2 ஆகிய அத்தியாயங்களுக்கு அமைய முழு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும். வைத்தியர் ஷாபிக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான சம்பளத்தை வழங்குமாறு குருநாகல் போதனா வைத்தியாசாலையின் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வைத்தியர் ஷாபியை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எச்சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றுகையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட மகப்பேறு (சிசேரியன்) அறுவை சிகிச்சையின் போது சிங்கள பெண்களுக்கு கருத்தடையாகும் வகையில் செயற்பட்டார் என குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து 6 பேரை உள்ளடக்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பிலான அறிக்கை அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிற்கு 2019 ஆம் ஆண்டு 06 மாதம் 11ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபிக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு சுகாதார சேவை குழு 2019.06.11 ஆம் திகதியே அனுமதி வழங்கியது.
ஆரம்பகட்ட விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினரால் 2020ஆம் ஆண்டு 01 ஆம் மாதம் 20 ஆம் திகதி இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வைத்தியர் ஷாபிக்கு தொடர்ந்து கட்டாய விடுமுறை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
குருநாகல் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து வைத்தியர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்டார். தன்மை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறு வைத்தியர் ஷாபி பலமுறை அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிற்கும், சுகாதாரத்துறை அமைச்சிற்கும் மேன்முறையீடு செய்துள்ளார்.
வைத்தியர் ஷாபிக்கு தொடர்ந்து கட்டாய விடுமுறை வழங்குவது அவசியமாகும் என அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழு பரிந்துரை செய்ததற்கமைய அவருக்கு தொடர்ந்து கட்டாய விடுமுறை வழங்க 2020ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 12ஆம் திகதி இணக்கப்பாடு எடுக்கப்பட்டது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்கான உரிய சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அதற்கமைய தனக்கு சம்பளத்தை வழங்குமாறும், மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வைத்தியர் ஷாபி கடந்த 10ஆம் மாதம் 27ஆம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளருக்கும், அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதற்கமைய அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் செயலாளரின் இலக்கம் எச்.எஸ்.சி-டி.ஐ.எஸ்-028-2019 மற்றும் 2021.11.30 திகதி கடிதம் ஊடாக கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பில் நிறுவன சட்டக் கோவையின் 12ஆம் பிரிவின் 20.2 அத்தியாயத்திற்கமைய செயற்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிற்கு அறிவிக்குமாறும், நிறுவன சட்டக்கோவை 12 ஆம் பிரிவின் 20.2 அத்தியாயத்திற்கமைய சம்பளம் வழங்குமாறும் அவ்வாறு சம்பளம் வழங்காமல் இருப்பதற்கான காரணம் தொடர்பில் அறிவிக்கமாறும் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை தொடர்பில் நிறுவன சட்டக் கோவையின் 12ஆம் பிரிவின் 20.1 மற்றும் 20.2 ஆகிய அத்தியாயங்களுக்கு அமைய முழு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும். வைத்தியர் ஷாபிக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்குமாறு குருநாகல் போதனா வைத்தியாசாலையின் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபியை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எச்சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment