சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து தாய்வானுடன் உறவைத் துண்டித்தது நிகரகுவா - News View

About Us

About Us

Breaking

Friday, December 10, 2021

சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து தாய்வானுடன் உறவைத் துண்டித்தது நிகரகுவா

சுயாட்சி புரியும் ஜனநாயக தீவான தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளை நிகரகுவா துண்டித்துள்ளது. 

தாய்வானை தனது நாட்டின் ஓர் அங்கமாகக் கூறிவரும் சீனாவின் அழுத்தத்திற்கு மத்தியில் தாய்வானுடன் இராஜதந்திர உறவை தொடர்ந்து பேணும் நாடுகள் எண்ணிக்கை தற்போது 14 ஆக குறைந்துள்ளது.

சீனாவின் ‘ஒரே நாடு’ கொள்கையை மேற்கோள் காட்டி மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் வெளியுறவு அமைச்சு கடந்த வியாழக்கிழமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

‘உலகில் ஒற்றை சீனா மாத்திரமே உள்ளது என்பதை நிகரகுவா குடியரசின் அரசாங்கம் அங்கீகரிக்கிறது’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

‘அனைத்து சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அதிகாரபூர்வ அரசாக சீன மக்கள் குடியரசு இருப்பதோடு சீன ஆட்புலத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக தாய்வான் உள்ளது. தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளை நிகரகுவா குடியரசின் அரசாங்கம் இன்று முறித்துக் கொள்வதோடு எந்த ஒரு தொடர்பு அல்லது உத்தியோகபூர்வ உறவுகளை நிறுத்துகிறது’ என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிகரகுவாவின் இந்த அறிவிப்பு வெளியான மூன்று மணி நேரத்தின் பின், நிகரகுவாவுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் கூட்டு அறிக்கை ஒன்றில் இரு தரப்பும் கைச்சாத்திட்டதாக சீனாவின் தேசிய தகவல் சபை அலுவலகம் அறிவித்தது.

ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

‘நிகரகுவா அரசினால் எடுக்கப்பட்ட இந்த சரியான முடிவை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இது காலத்தின் போக்கு மற்றும் மக்கள் அபிலாஷைகளுக்கு ஏற்ப உள்ளது’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், பீஜிங்கின் ஒரே சீனா கொள்கை ஒருமித்து பரந்த அளவில் ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தாய்வான் வெளி விவகார அமைச்சு, தாய்வான் மக்களின் நட்புறவை புறக்கணிப்பதற்கு நிகரகுவா ஜனாதிபதி டானியேல் ஓர்டெகா எடுத்த முடிவை இட்டு வருந்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

நிகரகுவாவுடனான உறவை கைவிடுவதாக தாய்வானும் அறிவித்துள்ளது. எனினும் இது நிகரகுவாவின் தன்னிச்சையான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

சீனா குடியரசாக முன்னர் அறியப்பட்ட தாய்வான், சீன சிவில் யுத்தத்தின் முடிவில் தனி நிர்வாகமாக விலகிச் சென்றது. அது இரண்டாம் உலகப் போர் முடிவில் இருந்து 1970 களின் ஆரம்பம் வரை சீனாவை பிரதிநிதித்துவப்படுத்தியது.

எனினும் 2000 கள் தொடக்கம் கரீபியன், தென் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த பெரும்பாலும் சிறிய நாடுகளான தாய்வானின் எஞ்சிய நட்பு நாடுகளை சீனா படிப்படியாக தன் பக்கம் இழுத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு தாய்வான் ஜனாதிபதியாக ட்சாய் இங் வென் தேர்வானது தொடக்கம் சீனா தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு முன் கடைசியாக 2019 இல் கிரிபிட்டி மற்றும் சொலொமன் தீவுகள் தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தன.

ஜனாதிபதி ட்சாய் இங் வென் பதவிக்கு வந்தது தொடக்கம் தாய்வானுடன் இராஜதந்திர உறவைக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 21 இல் இருந்து தற்போது 14 ஆக குறைந்துள்ளது.

No comments:

Post a Comment