சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான பொருளாதார கொள்கையை உருவாக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமைச்சின் மூலமாக அதனை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.
மேற்படி பொருளாதார கொள்கை, நடைமுறை மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு நிலையான கொள்கையாக அமைய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதமர் சபையில் எடுத்துரைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்தல் அமைச்சு,அதனோடு இணைந்த இராஜாங்க அமைச்சுகள் மீதான வரவு செலவுத் திட்ட குறுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், பொருளாதார கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் கீழ் எதிர்காலத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் துறையை இணைத்து செயல்படும் விதத்திலான பொருளாதார மறுசீரமைப்பை நோக்காகக் கொண்ட நிலையான பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
அதற்காக கொள்கை ஆய்வு நிறுவனம் மூலம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அனைத்து கொள்கைகளையும் தயாரிக்கும் போது கண்டிப்பாக சரியான தரவுகளின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில் பொருளாதார கொள்கை மட்டுமன்றி அனைத்து கொள்கைகளையும் தயாரிக்கும்போது சரியான தரவுகள் அவற்றுக்கு அவசியமாகும். அதற்காக எமது அமைச்சின் கீழ் வரும் குடிசன மதிப்பீட்டு திணைக்களத்திற்கும் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் மேற்கொள்ளவுள்ள குடிசன மதிப்பீட்டை 2023ஆம் வருடத்தில் நிறைவு செய்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
அதேவேளை அரச துறையில் நிதி அற்ற வளங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அதனை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு கட்டுப்பாட்டாளர் நாயகம் அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களை ஏற்படுத்தும் உபாய அபிவிருத்தி திட்டம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நிதியமைச்சு மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் நெருக்கமாக செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சர்வதேச நாடுகளைப் போன்றே இலங்கையும் பொருளாதார அபிவிருத்தியில் பலவீனமான நிலையை கடந்து வந்துள்ளது. அந்த சவாலை வெற்றி கொண்டு நிலையான அபிவிருத்தி மறுசீரமைப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக அனைத்து பிரிவுகளையும் இணைத்துக்கொண்டு குறுகியகால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிப்பதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment