நா.தனுஜா
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் மட்டக்களப்பு வாழ் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மீது நீண்டகால அடிப்படையில் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள 11 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமது மத வழிபாடுகளை அச்சமின்றி முன்னெடுப்பதில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துள்ள சவால்கள், கிறிஸ்தவ சமூகத்தின் மீது ஏனைய வடிவங்களில் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார நெருக்கடிகள் உள்ளடங்கலாக இவ்விரு சமூகங்களும் பல்வேறு வழிகளிலும் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு 'தேசிய பாதுகாப்பு' என்ற விடயம்' அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பாக' நோக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்கனவே வலுவிழந்த நிலையிலிருக்கக்கூடிய ஒரு சமூகம் மேலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடிய வகையில் அச்சமூகத்தை இலக்கு வைத்து செயற்படுவதில் தங்கியிருக்காத பாதுகாப்புப் பொறிமுறையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகத்தினரும் தற்போது முகங்கொடுத்துள்ள அவலநிலை தொடர்பில் ஆராய்வதற்காக மனித உரிமை ஆர்வலர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுமான ராதிகா குமாரசுவாமி, நிமல்கா பெர்னாண்டோ, சகுந்தலா கதிர்காமர், சுலானி கொடிகார, ரெஹாப் மமூர், யாமினி ரவீந்திரன், த்யாகி ருவன்பத்திரண, குமுதினி சாமுவேல், ஷ்ரீன் ஸரூர், அம்பிகா சற்குணநாதன் மற்றும் முகதஸா வஹிட் ஆகியோர் கடந்த 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ்விஜயத்தின் போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்குறிப்பிட்ட 11 செயற்பாட்டாளர்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள ஆரம்ப அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வறிக்கையில் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் மட்டக்களப்பில் வாழும் தேவாலய வழிபாட்டைச் சார்ந்திராத கிறிஸ்தவர்கள் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கங்கள் மறுக்கப்பட முடியாதவையாகும்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அதிலிருந்து மீண்டுவருகின்ற அவர்களது அனுபவம் தொடர்பில் கேள்வியெழுப்புவது அவர்களை மேலும் பாதிப்பதாகவே அமையும் என்பதில் நாம் தெளிவாக இருந்தோம்.
அதுமாத்திரமன்றி ஏற்கனவே பல்வேறு தரப்பினர் அவர்களைச் சந்தித்து இதுபற்றிப் பேசியிருக்கின்றார்கள். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினோம்.
அதன்போது தமது மத ரீதியான நம்பிக்கைகளை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் செயற்படுத்துவதில் கிறிஸ்தவ சமூகம் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் சவால்களை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. சட்டரீதியான அரச தலையீடு மற்றும் இந்து சமூகம், கத்தோலிக்கத் தேவாலயம் ஆகியவற்றினால் ஓரங்கட்டப்படுதல் ஆகியவை இதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்புடைய, இந்துத்துவ சித்தாத்தங்களைப் பிரசாரம் செய்கின்ற இந்துக்குழுக்கள் கிறிஸ்தவ சமூகத்தை இலக்குவைத்துச் செயற்படுவது தொடர்பில் கிறிஸ்தவ போதகர்கள் (பாஸ்டர்) எம்மிடம் எடுத்துரைத்தனர்.
மத வழிபாட்டு இடங்களை அமைப்பதற்கான அனுமதி கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மறுக்கப்படல், பொது மயானத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படல், அவர்களது பிள்ளைகளைத் தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு மறுத்தல், வன்முறைகள் மூலமும் கிறிஸ்தவ போதகர்களுக்கு (பாஸ்டர்) எதிரான அச்சுறுத்தல்கள் மூலமும் மதவழிபாட்டுக் கூட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய வடிவங்களிலும் கிறிஸ்தவ சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் இடம்பெறுகின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடளித்த அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் எமக்குக் கூறப்பட்டது.
மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் மனைவிமார் மற்றும் தாய்மாரையும் சந்தித்தோம்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன் இதனால் இளம் பிள்ளைகளையுடைய பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இடம்பெற்ற அநேகமான கைது நடவடிக்கைகள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்களின் வரலாற்று ரீதியான தொடர்ச்சியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
குறிப்பாக பலர் விசாரணைக்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டு, பல மாதங்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவ்வாறு விடுதலை செய்யப்படும்போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் இழந்திருந்ததுடன் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சஹ்ரானால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் நோக்கம் மற்றும் இடம் என்பன தொடர்பில் வழங்கப்பட்ட தவறான தகவல்களால் அல்லது வலுகட்டாயமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாத்திரம் அதில் கலந்துகொண்டவர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் குடும்பத்தினர், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஏனையோரால் ஒதுக்கப்பட்டிருப்பதால் அக்குடும்பங்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பினர் அக்குடும்பத்தினரின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதும் சமூகத்திலிருந்து அவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவதற்கும் ஏனையோர் அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கும் வழிவகுத்துள்ளது. அதுமாத்திரமன்றி அக்குடும்பங்களுக்கு உதவுபவர்களும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதுடன் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.
'பெரும்பான்மை இருக்கும் இடங்களில் எல்லாம் சிறுபான்மை ஒடுக்கப்படும்' என்று ஒரு சமூகத்தின் தலைவர் எம்மிடம் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு 'தேசிய பாதுகாப்பு' என்ற விடயம் 'அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பாக' நோக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதற்கு ஏற்கனவே வலுவிழந்த நிலையிலிருக்கக்கூடிய ஒரு சமூகம் மேலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடிய வகையில் அச்சமூகத்தை இலக்குவைத்து செயற்படுவதில் தங்கியிருக்காத பாதுகாப்புப் பொறிமுறையை அரசு உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment