வடக்கின் தீவக மின் திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை - அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 8, 2021

வடக்கின் தீவக மின் திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை - அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

வடக்கில் 3 தீவுகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த மின் திட்டங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நயினதீவில் சீனா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2 ஆம் திகதி சீனா அறிவித்திருந்தது. மூன்றாம் தரப்பினரால் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் சீனா குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

கேள்வி : வடக்கில் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த 3 மின்உற்பத்தி வேலைத் திட்டங்களிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் சீனா அறிவித்தது. இந்நிலையில் இந்த வேலைத் திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா? சேதன பசளை பிரச்சினையால் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான நட்புறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா?

பதில் : இந்த வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. உரப் பிரச்சினை தொடர்பில் இலங்கையிலுள்ள சீன தூதுவர் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட நட்புறவில் எவ்வித விரிசலும் இல்லை என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

சேதன பசளை விவகாரம் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இது குறித்த இரு தரப்பினருக்கு மாத்திரமானதாகும். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

இலங்கையில் இவ்வாறு 3 வேலைத்திட்டங்களையும் கைவிட்டுள்ள சீன நிறுவனம் மாலைத்தீவில் 12 தீவுகளில் சூரிய மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அந்நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment