சுமந்திரனுக்கு சவால் விடுத்தார் டக்ளஸ் - நீதிமன்றத்தை நாடி உண்மையை நிருபிக்கவும் தயார் என்றார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 8, 2021

சுமந்திரனுக்கு சவால் விடுத்தார் டக்ளஸ் - நீதிமன்றத்தை நாடி உண்மையை நிருபிக்கவும் தயார் என்றார்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கில் தொழிலில் ஈடுபடும் 500 இழுவை வலை படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாக பெறுவதாக சுமந்திரன் எம்.பி. தனது சிறப்புரிமையை பயன்படுத்தி சபையில் கூறியுள்ளார், அவர் முடியுமானால் இந்தக் கருத்தை பொது வெளியில் ஊடகங்களுக்கு சொல்ல முடியுமாவென கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) கடல் தொழில் அமைச்சு மீதான திருத்தங்கள். தெளிவு படுத்தல்களை முன் வைக்கும்போதே இவ்வாறு சவால் விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த சபையில் நான் இல்லாத நேரம் சுமந்திரன் மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய இரு எம்பிக்கள் எனது பெயரை இரு விடயங்களோடு சம்பந்தப்படுத்தியிருக்கின்றார்கள்.

முதலாவது சுமந்திரனின் அந்த பேச்சை ஹன்சாட்டிலிருந்து அகற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் அது முற்றிலும் பொய்யானது. பாராளுமன்றத்தில் தனது சிறப்புரிமையை பயன்படுத்தி பொய்யான குற்றச்சாடடை முன்வைத்துள்ளார்.

அதாவது 2017 ஆம் ஆண்டிலும் 2018 ஆம் ஆண்டிலும் தங்களின் ''முண்டாட்ச்சி''அதாவது தாங்கள் முண்டுகொடுத்து கொண்டுவந்த ஆட்சியில் இரண்டு சட்டங்களை கொண்டுவந்ததாகவும் ஒன்று இழுவைவலை படகு தடைச்சட்டம், இரண்டாவது வெளிநாட்டு படகுகளின் திருத்த சட்டம் எனவும் கூறினார்.

அவர்கள் இந்த சட்டங்களை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் அந்த சட்டங்களை கொண்டு வந்ததால் குழு நிலை விவாதத்தில் அந்த சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அன்றைய நாரா நிறுவனத்திற்கு இந்த அமைச்சரவையால் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டாமென சொல்லியும் கிட்டத்தட்ட வடக்கு மாகாணத்தில் 500 க்கும் மேற்பட்ட இழுவை வலைப் படகுகள் இருக்கின்றன. அவர்களுக்கு தற்காலிகமாக பரீட்சார்த்த அடிப்படையில் ஒரு மாற்றுத் தொழில் கிடைக்கும் வரை அதனை அவர்களுக்கு அனுமதிக்குமாறு அன்று அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தியிருந்தார்கள். அந்த வகையில் நாங்கள் அதனை தொடருகின்றோம். ஆய்வுகளை செய்து கொண்டிருக்கின்றோம். விரைவில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவிருக்கின்றோம். அதுவரையில் அவர்கள் தற்காலிகமாக அந்த தொழிலை தொடர்ந்தும் செய்வார்கள்.

இந்நிலையில் இந்த 500 படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாக பெறுவதாகவும் அதனால்தான் அது அனுமதிக்கப்படுவதாகவும் சுமந்திரன் எம்.பி தனது சிறப்புரிமையை பயன் படுத்தி இந்த சபையில் கூறியிருந்தார்.

இதற்கு அந்த கிராமத்து மக்கள் சுமந்திரனுக்கு தகுந்த பாடத்தை படிப்பித்திருந்தார்கள். அந்த கிராமத்தில் ஹர்த்தால் நடத்தி சுமந்திரனின் உருவ பொம்மையையும் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

பாராளுமன்றத்தில் எதனையும் வாந்தி எடுக்கலாமென சிலர் நினைக்கின்றனர். பொது வெளியில் நாளை அவர் இந்த கருத்தை ஊடகங்களுக்கு முன்வைப்பாரா என நான் வெளிப்படையாக அவரிடம் கேட்கின்றேன். அப்படி சொல்வாரா இருந்தால் நான் நீதிமன்றத்தின் மூலம் அது தொடர்பான உண்மையை நிரூபிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment