(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாகவே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சிறப்பாகச் செயற்பட முடியாதுள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்று உதவி கோரி இருந்தார். இந்தியாவிலிருந்து உதவிகளை பெறுவதற்கு வெட்கப்படத் தேவையில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற நிதி அமைச்சு , பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு ,நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு,சமுர்த்தி உள்ளக பொருளாதார ,நுண்நிதிய ,சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் டொலர் பிரச்சினை இருந்துவருகின்றது. பொருளாதாரம் பாதிப்படைய கொவிட் தொற்றும் காரணமாகும்.
டொலர்களை நாட்டுக்கு பெற்றுக் கொள்ளும் வழிகளான வெளிநாட்டுப் பணியாளர்கள், தேயிலை ஏற்றுதி, சுற்றுலாத்துறை, ஆடைத் தொழிற்சாலை ஆகியவற்றினை ஊக்குவிக்க வேண்டும்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் சிறப்பாக செயற்படக் கூடியவர். தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்க தயாராக இருக்கின்றது.
நிதி அமைச்சர் இந்தியாவுக்கு சென்று உதவி கோரி இருந்தார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். இந்தியா எமது அண்டை நாடு. அதனால் இந்தியாவிடம் உதவி கேட்பதற்கு வெட்கப்படத் தேவையில்லை.
பாக்கிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரயந்த குமாரவுக்கு நடைபெற்றதைபோல எதிர்காலத்தில் வேறு எவருக்கும் நடக்கக்கூடாது.
இந்தியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அனுதாபங்களை தெரிவிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment