சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் திருத்தல் மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, December 10, 2021

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் திருத்தல் மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டு ஹிஜாஸுக்கு எதிரான வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன கடந்த நவம்பர் 19 ஆம் திகதி அறிவித்த நிலையிலேயே அந்த உத்தரவை திருத்தி, பிணையில் விடுவிக்குமாறு கோரி இந்த மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவானது நேற்று, மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வ, இந்த திருத்தல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைக்க எதிர்ப்பார்ப்பதாக அறிவித்தார்.

இந்த மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரரான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜரானார்.

தனது சேவை பெறுநருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தமது சேவை பெறுநருக்கு பிணையளிக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக மேல் நீதிமன்றில் கோரப்பட்ட போதும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 15 (2) ஆம் அத்தியாயத்தின் கீழ் பிரதிவாதியை பிணையில் விடுவிக்க தனக்கு அதிகாரம் இல்லை என மேல் நீதிமன்ற நீதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

எனவே, தனது சேவை பெறுநரை பிணையில் விடுவிக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு அவர் கோரினார்.

இதன்போது, மனுதாரர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கைக்கு தான் ஆட்சேபனை முன் வைப்பதாகவும், அதனை முன் வைக்க கால அவகாசம் வேண்டும் எனவும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா குறிப்பிட்டார்.

அதன்படி, ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 2022 ஜனவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் முன் வைக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த மனுவை எதிர்வரும் 2022 ஜனவரி 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.

No comments:

Post a Comment