ஹூங்கம பொலிஸ் நிலைய சிறையில் வைக்கப்பட்டிருந்த 61 வயது சந்தேகநபர் மரணமடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பௌர்ணமின தினமான நேற்றையதினம் (18) பிற்பகல் வேளையில் ரன்ன நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில், உரிய அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானத்தை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹுங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த சந்தேகநபரிடமிருந்து 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 2 மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 10 ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சுகவீனமுற்று சிறைக் கூடத்தில் வீழ்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
மரணமடைந்தவர், சுஜீவ ஹோட்டல், ரன்ன எனும் முகவரியில் வசித்து வந்தவராவார்.
சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக ரன்ன வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment