(எம்.மனோசித்ரா)
தென் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கான பயணத்தடை நீக்கம் உள்ளிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
பயணத்தடை நீக்கம்
அதற்கமைய தென் ஆபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோதோ, நபிபியா, சிம்பாபே மற்றும் எஸ்வதினி ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் பீ.1.1.529 என்ற புதிய அபாயம் மிக்க கொவிட் பிறழ்வு கண்டறியப்பட்டது. இந்த பிறழ்விற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 'ஒமிக்ரோன்' என்று பெயரிடப்பட்டு , அது அபாயம் மிக்க பிறழ்வாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பையடுத்து நவம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தென் ஆபிரிக்கா, போஸ்ட்வானா, லெசோதோ, நபீபியா, சிம்பாபே மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணையவழி உறுதிப்படுத்தல்
விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் பயணிகள் அனைவரும் சுகாதார அமைச்சின் இணைவழி சுகாதார அறிவித்தல் ஆவணத்தில், 'தடுப்பூசி அட்டை, கொவிட்-19 எதிர்மறை அறிக்கை, கடவுச்சீட்டு' உள்ளிட்ட ஆவண பிரதிகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பிரத்தியேக சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவேற்றிய பின்னர் பயணிகளின் கையடக்க தொலைபேசிக்கு கியு.ஆர். (QR Code) கோட் கிடைக்கப் பெறும் என்று குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். பரிசோதனை
வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை (தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்), கடந்த 3 மாதங்களுக்குள் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களாக இருந்தால் 48 மணித்தியாலங்களில் செய்து கொண்ட அன்டிஜன் பரிசோதனை அறிக்கை மற்றும் தடுப்பூசி அட்டை என்பவற்றையும் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment