(எம்.எப்.எம்.பஸீர்)
உலக சிறைக் கைதிகள் தினமான கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான விவகாரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி உத்தரவிட்டது. இதற்கமைய, பொலிஸ்மா அதிபரின் உத்தர்வின் கீழ் இந்த விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.
அதன்படி , சி.சி.டி.யினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், அனுராதபுரம் சிறைச்சாலையின் இரு கைதிகள், 7 சிறைச்சாலை அதிகாரிகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சிறைக் கைதிகளின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
முன்னதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று, தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய சம்பவம் ஊடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, குறித்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
பூபாலசிங்கம் சூரியபாலன், மதியரசன் சுலக்ஷன், கனேஷன் தர்ஷன், கந்தப்பு கஜேந்ரன், இராசதுரை திருவருள், கனேசமூர்த்தி சிதுர்ஷன், மெய்யமுத்து சுதாகரன், ரீ.கந்தரூபன் ஆகிய அரசியல் கைதிகளே அம்மனுவினை தாக்கல் செய்தனர்.
அம்மனு மீதான பரிசீலனைகளின் போதே, குற்றவியல் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
No comments:
Post a Comment